மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா : கோர்ட் புதிய உத்தரவு!

இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா : கோர்ட் புதிய உத்தரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்துவந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் அதிமுக-வின் சசிகலா அணி சார்பில் தினகரன், பன்னீர் அணி சார்பில் மதுசூதனன், திமுக மருது கணேஷ், பாஜக-வின் கங்கை அமரன் என மொத்தம் 62 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாகக் கூறி அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து வந்தன. மேலும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு பணப் பட்டுவாடா தொடர்பாக அதிமுக-வின் இரு அணியினருக்கும் மோதல் ஏற்பட்டது. மறுநாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகள் உள்பட 36 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் 3 கோடிக்கும்மேல் ரொக்கப் பணமும், இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் அளவில் பணப் பட்டுவாடா செய்ததற்கான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஆவணத்தில் பல அமைச்சர்கள் பெயரும் இருந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது . இதைத் தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்திய தேர்தல் அதிகாரிகள் தேர்தலை ரத்துசெய்வதாக கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி நள்ளிரவில் அறிவித்தனர். அதிகளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அருண் நடராஜன் என்பவர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீதும், பணம் வாங்கிய வாக்காளர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமெனவும்' அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஜுன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon