மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தவறாக சித்தரிக்கமாட்டேன் : இயக்குநரிடம் எழுதி வாங்கிய நடிகை!

தவறாக சித்தரிக்கமாட்டேன் : இயக்குநரிடம் எழுதி வாங்கிய நடிகை!

அறிமுக இயக்குநர் மார்க்ஸ் இயக்கும் படம் நகர்வலம். காதல் சொல்ல வந்தேன், மெய்யழகி படங்களில் நடித்த பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தீக்‌ஷிதா மாணிக்கம் நடிகையாக அறிமுகமாகிறார். அறிமுக நடிகை என்றாலும் உஷாரான நடிகையாக இருக்கிறார் தீக்‌ஷிதா. வழக்கமாக, கோலிவுட்டில் படம் வெளியீட்டின் சமயம் சில நடிகைகள் இயக்குநர் என்னை தவறாகச் சித்தரித்து படம்பிடித்துவிட்டார், கதை சொல்லும்போது இதையெல்லாம் அவர் குறிப்பிடவில்லை என பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் சம்பவங்கள் நடைபெறும். தீக்‌ஷிதா இப்படியெல்லாம் ஏதும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே இயக்குநரிடம் ‘எப்படி கதை சொன்னேனோ அப்படித்தான் எடுப்பேன். தவறான கோணத்தில் எடுக்க மாட்டேன்’ என்று எழுதி கையெழுத்துப் போட்டு வாங்கியபின்னரே நடித்துக் கொடுத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் மார்க்ஸ் கூறும்போது, ‘படத்தின் ஹீரோ தண்ணீர் லாரி டிரைவர். அவர் தண்ணீர் சப்ளை செய்யும் இடத்தில் வசிக்கும் ஹீரோயினை காதலிக்கிறார். அதனால் வரும் பிரச்னைதான் படம். அந்தப் பிரச்னை இதுவரை யாரும் சொல்லாதது. முன்பகுதி கதை காமெடி ரொமான்ஸாகச் செல்லும். பின்பகுதி முழுவதும் கிளைமாக்ஸ்தான். இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடப்பதாக கிளைமாக்ஸ் இருக்கும். இந்தக் காட்சியில் ஹீரோயினுக்கு ஒரு நெருக்கடி ஏற்படும். அதைக் கேட்டு பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்தனர். ஆடிஷன் நடத்திதான் பெரம்பூரைச் சேர்ந்த தீக்‌ஷிதாவை ஒப்பந்தம் செய்தோம். அவரும் கிளைமாக்சில் தவறாக சித்தரிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து நடிக்கத் தயங்கினார். எப்படி கதை சொன்னேனோ அப்படித்தான் எடுப்பேன். தவறான கோணத்தில் எடுக்க மாட்டேன் என்று எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்த பிறகே நடிக்க சம்மதித்தார்’ என்றார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon