மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சசிகலாவின் காலில் விழுந்தவர்தானே ஓ.பி.எஸ்.: நாஞ்சில் சம்பத்

சசிகலாவின் காலில் விழுந்தவர்தானே ஓ.பி.எஸ்.: நாஞ்சில் சம்பத்

அதிமுக-வில் இருந்து சசிகலாவை நீக்கும்படி கூற ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதி இல்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுக அம்மா கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், இன்று ஏப்ரல் 21ஆம் தேதி சென்னையில் மாலைமலர் செய்தியாளரிடம் கூறுகையில்: அதிமுக இரு அணிகளும் இணைவதற்காக நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால் இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறாது. பன்னீர்செல்வம் அணியினர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும், சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர். எங்களுக்கு நிபந்தனை விதிக்க இவர்கள் யார்? கட்சியும் ஆட்சியும் எங்கள் பக்கம் இருக்கிறது. தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். எங்களுக்கு அவர்கள் நிபந்தனை விதித்து வருவார்களேயானால் அவர்கள் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை.

புரட்சித்தலைவி அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சமயத்திலும், அவர் மரணமடைந்த நேரத்திலும் ஓ.பன்னீர்செல்வம்தானே முதலமைச்சராக இருந்தார். அப்போது அவர் ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை. வாய்மூடி மவுனியாக இருந்தது ஏன்? அம்மா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. பன்னீர்செல்வம் பதவியில் இருந்தால் ஒரு பேச்சு பேசுவது, பதவி இல்லாவிட்டால் ஒரு பேச்சா? அதிமுக பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டவர் சசிகலா. அவரை நீக்கச் சொல்ல பன்னீர்செல்வத்துக்கு எந்தத் தகுதியும் கிடையாது. சசிகலாவின் காலில் விழுந்தவர்தானே இந்த ஓ.பி.எஸ். டி.டி.வி.தினகரன் குறித்தும், பன்னீர்செல்வம் அணியினர் விமர்சிக்கின்றனர். தமிழகத்தின் தலைவராக தினகரன் மீண்டும் விசுவரூபம் எடுப்பது தவிர்க்க முடியாதது என்று அவர் கூறினார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon