மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

மனு கொடுக்க காவல் நிலையம் சென்றவர்கள் மரணமடைந்த சோகம்!

மனு கொடுக்க காவல் நிலையம் சென்றவர்கள் மரணமடைந்த சோகம்!

ஆந்திரப்பிரதேச மாநிலம், திருப்பதி அருகே சித்தூர் மாவட்டத்தில் சாலையோர கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்ரீகாளகஸ்தியில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, சித்தூர் ஏர்பேடு பகுதியில் புதலப்பட்டு – நாயுடுபேட்டை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த மின்கம்பத்தில் மோதியதுடன் ஒரு டீ கடைக்குள் புகுந்துள்ளது. அப்போது முனகபாலையம் கிராமப் பொதுமக்கள் சொர்ணமுகி ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை தடுக்கக் கோரி ஏர்பேடு காவல் நிலைய எஸ்.பி., ஜெயலட்சுமியிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.

இந்நிலையில், சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதாலும், மின்சாரம் தாக்கியதாலும் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருப்பதி மற்றும் ஸ்ரீகாளகஸ்தி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. சிலர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து எஸ்.பி., ஜெயலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக முயற்சித்தபோது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி சாலை அருகிலிருந்த டீ கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும், படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஆந்திர அரசு உத்தரவிட்டு, பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon