மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

மாம்பழம் : 50,000 டன் ஏற்றுமதி!

மாம்பழம் : 50,000 டன் ஏற்றுமதி!

இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதி, நடப்பு 2017-18 நிதியாண்டில் 50,000 டன்னை எட்டும் என வேளாண் மற்றும் பதப்படுத்தல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச சந்தையில் இந்திய மாம்பழங்களுக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-17 நிதியாண்டில் 45,730 டன் அளவிலான மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில், இந்திய மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இதுவரையில் 200 டன் அளவிலான மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதில், 131 டன் மாம்பழங்கள் அமெரிக்காவுக்கும், 42 டன் மாம்பழங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், 18 டன் மாம்பழங்கள் ஐரோப்பிய யூனியனுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி மாநிலங்களில் அதிகளவில் விளையும் பங்கனபள்ளி, அல்ஃபோன்சா, கேஸர் வகை மாம்பழங்கள் அதிகளவில் ஏற்றுமதியாகியுள்ளன. தற்போதைய நிலையில், மாம்பழ விளைச்சலும் அதன் தரமும் சிறப்பாக உள்ளது. இதே நிலை தொடருமானால், நடப்பு நிதியாண்டில் மாம்பழ ஏற்றுமதி 50,000 டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மாம்பழங்களுக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் அதிக தேவை நிலவுவதால் இவ்வாண்டில் அதிகளவிலான மாம்பழங்கள் இந்நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கிறோம். வருகிற ஜுன் மாதம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மாம்பழ சீசன் தொடங்கவிருப்பதால், அதிகளவிலான மாம்பழங்கள் சந்தைக்கு வரத் தொடங்கும்’ என்று கூறினார். மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, நடப்பு நிதியாண்டில் 1.92 கோடி டன் அளவிலான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1.86 கோடி டன் அளவிலான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon