மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ஆதாரை கட்டாயமாக்கினால் மோசடியைத் தடுக்க முடியுமா?

ஆதாரை கட்டாயமாக்கினால் மோசடியைத் தடுக்க முடியுமா?

நீதிமன்ற உத்தரவை மீறி ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? என்று, உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு மானியம், ஓட்டுநர் உரிமம், புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் கட்டாயம், பழைய பான் கார்டுடன் ஆதார் இணைப்பு மற்றும் புதிய ஆதார் கார்டு பெற ஆதார் கட்டாயம் என தொடர்ந்து மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது.

இந்நிலையில், ஆதார் காட்டாயமாக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சியாம் திவான், ’ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது. மக்கள் விருப்பப்பட்டால் அதைப் பயன்படுத்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சமூக நலத் திட்டங்களின் உதவிகளைப் பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதற்குப் பின்பும் மத்திய அரசு பல திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கியது.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் நீதிபதி அசோக் பூஷண் ஆகியோரது அமர்வு முன் மீண்டும் இன்று (ஏப்ரல், 21) விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஆதார் எண்ணை பல திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆதார் எண்ணை எந்தெந்த திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில், அதைப் பின்பற்றி மத்திய அரசு செயல்படாதது ஏன்? ஆதாரை கட்டாயமாக்குவதன் மூலம் மோசடியைத் தடுக்க முடியுமா? இது, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மத்திய அரசுத் தரப்பில் பதிலளித்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்தி, ’போலி பான்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் சந்தையில் வெள்ளம்போல் பெருகிவிட்டன. முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஒருவரே பல பான் கார்டுகள் வைத்துள்ளார். அதன்மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் ஏன் கட்டாயம் என்பதை அரசு விளக்க வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஷெல் நிறுவனங்கள் வாயிலாக நடைபெற்ற வரி ஏய்ப்பு பின்னணியில் போலி பான் எண்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆதார் கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon