மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

அதிமுக இணைப்பு லஞ்சப் பணத்தை பாதுகாக்கும் : ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுக இணைப்பு லஞ்சப் பணத்தை பாதுகாக்கும் : ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுக இணைப்பு என்பது ஊழல் பணத்தை பாதுகாக்கும் முயற்சியேயாகும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இன்று ஏப்ரல் 21ஆம் தேதி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக 2 கோஷ்டிகளாக பிரிந்ததையடுத்து, தற்போது இரண்டு அணியினரும் ஒன்றாகச் சேர்வதற்கான முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு மிக முக்கியக் காரணமாக, பதவிக் காலத்தில் அவர்கள் சேர்த்துவைத்த ஊழல் பணத்தை பாதுகாப்பதற்கான முயற்சியே தவிர தமிழக மக்களின் நலன் சார்ந்தோ, மாநில உரிமை சார்ந்தோ அல்ல என்பதை பொதுமக்கள் அறிய வேண்டும்.

அதிமுக-வில் 2 அணிகள் பிரிவது அல்லது இணைவது அக்கட்சியின் உள்கட்சி விவகாரம் என்றபோதிலும், இவர்களது மோதலால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இவர்களது சண்டையால் தமிழக அரசு முடங்கிப் போயுள்ளது. வரலாறு காணாத வறட்சி, அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை, கடும் குடிநீர் பஞ்சம், மத்திய அரசின் நீட் தேர்வால் பாதிப்புக்குள்ளாகும் தமிழக மாணவர்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணப்படாமல் உள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி என்பதும் எள்ளளவும் தமிழக மக்கள் நலன் சார்ந்ததல்ல. தாங்கள் சம்பாதித்த ஊழல் பணத்தைப் பாதுகாப்பது, மீதம் உள்ள ஆட்சிக் காலத்தில் ஆட்சியை பாதுகாத்து கொள்ளையடிப்பதை உறுதி செய்துகொள்வதாகவே இவர்களின் நடவடிக்கை உள்ளது.

மேலும் ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி மத்திய அரசு தமிழக ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலையிடுகிறது. இதற்கு வருமானவரித் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறது. தனது சுயலாபத்துக்காக கொல்லைப்புற அரசியல் நடவடிக்கையை பல மாநிலங்களில் செயல்படுத்தி வருவதுபோல தமிழகத்திலும் காலூன்ற பாஜக மேற்கொண்டுள்ள இத்தகைய கீழ்த்தரமான முயற்சிக்கு அதிகார மோகத்தில் அக்கறையுள்ள அதிமுக தலைவர்கள் இடம் கொடுக்கிறார்கள். நேர்மைக்கும், சட்டத்துக்கும் புறம்பான பாஜக-வின் இந்த முயற்சியை அதிமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon