மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

விஷால் அணி மீது மேலும் ஒரு வழக்கு!

விஷால் அணி மீது மேலும் ஒரு வழக்கு!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2017-2019ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்த தேர்தலை நடத்தினார்.

இந்த தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ பெருவாரியாக வெற்றிபெற்றது. சங்கத் தலைவராக விஷால் வெற்றிபெற்றார். துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர் வெற்றிபெற்றனர். கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன் வெற்றிபெற்றனர். பொருளாளர் பதவிக்கு விஷால் அணியில் இருந்து போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு வெற்றிபெற்றார்.

‘நலிந்த’ என்ற வார்த்தையே இருக்கக்கூடாது. எங்களுடைய அணி 24 மணி நேரமும் உழைக்கப் போகிறது. உறுப்பினர்களுக்கு பென்சன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம். இதுபோன்று பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், கதிரேசன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர் பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் பாபுகணேஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

அதில், தமிழ்த் திரைப்பட கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஆவணங்களை மேற்குறிப்பிட்ட 11 பேர் திருடியுள்ளதாகவும் இவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்தத் தகவல் உண்மையா, பொய்யா என விசாரணைக்குப் பின்னே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon