மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

மீன்வளப் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்

மீன்வளப் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக டாக்டர் எஸ்.பெலிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன்பிடித்தல், மீன் உயிர்தொழில்நுட்பம், மீன்வள பொருளாதாரம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல், மீன்வள விரிவாக்கம், மீன்வள தொழில்நுட்பம், மீன்வள பொறியியல் மற்றும் மீன்கள் பதப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இந்தப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் இருந்தநிலையில், பதிவாளர் ரத்னகுமார் பொறுப்பு துணைவேந்தராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி டாக்டர் எஸ்.பெலிக்ஸ், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்ற பெலிக்ஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

டாக்டர் பெலிக்ஸ் இதற்கு முன்பு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் பொன்னேரியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டீன்-ஆக பணிபுரிந்துவந்தார். இவர் மீன்வளம் பற்றி 10 புத்தகங்களையும் 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon