மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ரணில் விக்ரமசிங்கே டெல்லி வருகை!

ரணில் விக்ரமசிங்கே டெல்லி வருகை!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 5 நாள் அரசுப் பயணமாக வருகிற 25ஆம் தேதி டெல்லி வருகிறார்.

பிரதமர் மோடி, கடந்த 2015ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை சென்றார். வடகிழக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை தலைநகர் கொழும்புடன் இணைக்கும் ரயில் பாதையை தொடங்கிவைத்தார். அதையடுத்து, தற்போது 2வது தடவையாக வருகிற மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச புத்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை செல்கிறார்.

அப்போது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்துப் பேசுகிறார். இந்திய அரசு சார்பில் திரிகோணமலை துறைமுகம் திட்டம் கட்டித்தரும் திட்டம் நிலுவையில் உள்ளது. மற்றும் இந்தியா-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் இழுபறியில் உள்ளது. மோடி இலங்கை பயணத்தின்போது இந்தப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதை, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இலங்கையில் நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இலங்கை செல்வதற்கு முன்பாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வருகிற 25ஆம் தேதி டெல்லி வருகிறார். அப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்ட சண்டையின்போது பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு உதவியாக இந்திய அரசின் ரூ.30 ஆயிரம் கோடி நிதியதவியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்துவார் என தெரியவருகிறது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon