மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

முழு அடைப்பில் பங்கேற்போம் : விக்கிரமராஜா

முழு அடைப்பில் பங்கேற்போம் : விக்கிரமராஜா

விவசாயிகளின் நலன் கருதி முழு அடைப்பில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்கும் என்று அதன் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதையொட்டி வியாபாரிகளும் கடையடைப்பு நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்திருந்தார். இதையொட்டி அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விளக்கி விக்கிரம ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

அந்த கோரிக்கையை பரிசீலிக்க இன்று (21.4.2017) தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மோகன், பொருளாளர் கோவிந்தரா ஹீலு, மண்டல தலைவர்கள் சதக்அப்துல்லா, ஆம்பூர் கிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் கே. ஜோதிலிங்கம் என்.டி.மோகன், சாமுவேல், ஆதிகுருசாமி, ஜெயபால், ரவி,அமல்ராஜ் மற்றும் பலர் பங்கேற்று விவாதித்தனர்.

இக்கூட்டத்தில் 25ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்று கடைகளை அடைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி வரும் காலங்களில் வணிகர்களின் கருத்தை அறியாமல் கடையடைப்பு போராட்டத்தை அரசியல் கட்சிகள்அறிவிக்க வேண்டாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், விவசாயிகளுக்கு என்றும் வணிகர்கள் துணை நிற்பார்கள். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய- மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும், அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவுகளுக்கு ஆதரவாகவும் வணிகர்கள் 25ஆம்தேதி கடையடைப்பில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon