மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

இந்தியாவில் மோதும் தென்கொரிய நிறுவனங்கள்!

இந்தியாவில் மோதும் தென்கொரிய நிறுவனங்கள்!

ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு அங்கமான கியா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் விரைவில் ஆலையமைத்து வாகனத் தயாரிப்பில் ஈடுபடவிருக்கும் நிலையில், இவ்விரு நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவும் என்று ஹூண்டாய் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், இந்தியாவில் ஆலையமைத்து கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக கியா மோட்டார்ஸ் நிறுவனமும் சர்வதேச அளவில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் வளர்ந்துவரும் வாகனச் சந்தையை குறிவைத்துள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் ஆலையமைத்து கார்கள் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வந்தபிறகு, அதன் துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்துடன் கடும் போட்டி நிலவும் என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எக்ஸன்ட் மாடல் கார் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ஒய்.கே.கூ பேசுகையில், ‘வருகிற 2021ஆம் ஆண்டுக்குள் ஹூண்டாய் கார் விற்பனையை இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்காக, 2020ஆம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளோம். அதில் புதிய பிரிவில் உயர்வகை தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மூன்று மாடல்களும் அடங்கும். 2020ஆம் ஆண்டு வரையில் ஆண்டுக்குத் தலா இரண்டு புதிய மாடல் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக ரூ.5,000 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். 2021க்குள் ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதே எங்களின் முதன்மையான குறிக்கோளாகும். எங்களது மற்றொரு கிளை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் விரைவில் வரவிருக்கிறது. இரு நிறுவனங்களும் செயல்பாடு, நிர்வாகம் ஆகியவற்றில் மிகவும் வித்தியாசமானவை. இரு நிறுவனங்களும் ஒரே தலைமை நிறுவனத்தின் அங்கங்களாக இருந்தாலும், கியா மோட்டார்ஸுக்கு எதிராக எங்களது செயல்பாடு ஆக்ரோஷமானதாகவே இருக்கும். இந்திய வாகனச் சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது. எனவே, நாங்களும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடும் போட்டியை வழங்குவோம்’ என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon