மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

கோழி முட்டைகளை அடைகாத்த மனிதர்!

கோழி முட்டைகளை அடைகாத்த மனிதர்!

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44) கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமாக ஏதேனும் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க ஆபிரகாம் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் வினோத முயற்சியை மேற்கொண்டார்.

கோழி முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாத்து குஞ்சு பொறிக்கும். அதேபோல், செயற்கை முறையான ‘இன்குபேட்டர்’ கருவி மூலம் குஞ்சுகள் பொறிக்கப்படும்.

இந்நிலையில், ஆப்ரஹாம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன்மீது அமர்ந்து முட்டைகளை பொறிக்க முயற்சி செய்துள்ளார். அதன்படி, கடந்த மாதம் 29ஆம் தேதி அடை காக்கத் தொடங்கினார். முட்டைகளுக்கு 37 டிகிரி வெப்பம் கொடுத்தார். 23 நாட்கள் 12 மணிநேரம் கடந்த பிறகு நேற்று முன்தினம் அடைகாத்த முட்டைகளில் இருந்து 9 குஞ்சுகள் வெளிவந்தன. அதில், 8 மஞ்சள்நிற கோழிக் குஞ்சுகளும் ஒரு பிரவுன்நிற கோழிக் குஞ்சும் வெளிவந்தன. இவர் முட்டைகளை அடைகாக்கத் தொடங்கிய நாளில் இருந்து தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்துள்ளார். மற்றநேரம் முழுவதும் நாற்காலியில் மட்டுமே அமர்ந்திருந்தார். இதற்காக அவர், கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தச் செயலுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்குமுன்பு கரடி பொம்மைக்குள் நீண்டநேரம் அடைந்து கிடந்து சாதனை படைத்தார். கடந்த பிப்ரவரி மாதம், 12 டன் எடையுள்ள சுண்ணாம்புப் பாறைக்குள் 8 நாட்கள் தங்கியிருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon