மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் : பி.ஆர்.பாண்டியன்

டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் : பி.ஆர்.பாண்டியன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்டக்கூட்டம் வியாழக்கிழமை (நேற்று) சீர்காழியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு விவசாய சங்கத் தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இதில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து அதற்கான உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

அப்போது, அவர்கள் மத்தியில் பேசிய பி.ஆர்.பாண்டியன், ‘தற்போது காவிரி டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமத்திலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. வருவாயின்றி 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசானது அதை ஏற்க மறுத்துவருவது வேதனையளிக்கிறது.

எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், கர்நாடகம் உடனடியாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீரைக் கொடுக்கவும் வலியுறுத்தி, வருகிற ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon