மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தமிழகம்: ஜவுளித் துறை மேம்பாட்டுக்கு புதிய கொள்கை!

தமிழகம்: ஜவுளித் துறை மேம்பாட்டுக்கு புதிய கொள்கை!

நலிவடைந்துவரும் தமிழக ஜவுளி உற்பத்தித் துறையை மேம்படுத்த, அரசு புதிய கொள்கையை வகுத்து உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்புச் செயலாளர் பிரபு தாமோதரன் கூறுகையில், ‘தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் ஜவுளி உற்பத்தித் துறையின் பங்கு முக்கியமானது. பல்வேறு தொழில்களின் வளர்ச்சிக்கு ஜவுளி உற்பத்தித் துறை அடிப்படையாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழக ஜவுளி உற்பத்தித் துறை மிகுந்த சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நூற்பாலைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. தொழில் நலிவால் கடன் செலுத்தமுடியாத நிலைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆளாகி வருகின்றனர்.

எனவே, நலிவடைந்துவரும் தமிழக ஜவுளி உற்பத்தித் துறையை மேம்படுத்த தமிழக அரசானது ஜவுளிக் கொள்கையை அறிவிக்க வேண்டும். அதில், ஏற்கனவே இருக்கும் ஆலைகளில் வழங்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள், மின் சேமிப்பு, உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் திட்டங்கள் இடம்பெற வேண்டும். பருத்தி விளைச்சலை அதிகரிக்கத் தேவையான திட்டங்களும், மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி தொடர்பான திட்டங்களும் இடம்பெற வேண்டும்.

முன்னணி ஜவுளி ஏற்றுமதி மையங்களாகத் திகழும் திருப்பூர், கரூர், ஈரோடு ஆகியவற்றின் ஏற்றுமதி வளர்ச்சி 20 சதவிகிதத்தை எட்டும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் செயற்கை பஞ்சு கலந்த ஆடைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், இந்தத் துறையில் மின்னணு வணிகத்தை வளர்ப்பது போன்ற அம்சங்களும் இக்கொள்கையில் இடம்பெற வேண்டும். புதிய ஜவுளிக் கொள்கையை உருவாக்குவதற்காக சிறப்புக் குழு ஒன்றை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். புதிய ஜவுளிக் கொள்கையை உருவாக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்’ என்று கூறினார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon