மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ஐ.பி.எல். 2017 : அடிச்சா சிக்ஸ் மட்டும்தான்!

ஐ.பி.எல். 2017 : அடிச்சா சிக்ஸ் மட்டும்தான்!

ஐ.பி.எல். சீசன் 10-ன் 22வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் ஹாசிம் அம்லா சதம் விளாசினார். தொடக்க வீரராக களமிங்கிய அம்லா 60 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர் என 104 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணிக்கு எதிராக அதிக ஸ்கோர் அடித்துள்ள வீரரான மார்ஷ் 26 (21) ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர், விக்கெட் கீப்பர் சாஹா 11 (15) ரன் எடுத்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் தனது வழக்கமான அதிரடியால் 18 பந்துகளின் 40 ரன்களைச் சேர்த்தார். மும்பை தரப்பில் மிட்செல் மேச்லகேன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல் - ஜோஸ் பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்களைக் குவித்திருந்தபோது ஸ்டோனிஸ் பந்துவீச்சில் பார்த்திவ் படேல் 37 (18) கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, பட்லருடன் இணைந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பவுண்டரிகள் இன்றி சிக்ஸர்கள் மட்டுமே அடித்த நிதிஸ் ராணா தனது அரைசதத்தை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார். பவுண்டரிகள் இன்றி அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றார் அவர். இறுதியில், மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ராணா 7 சிக்சர்களுடன் 62 (34) ரன்னும், பாண்டியா 15 (4) ரன்னும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். சிறப்பாக விளையாடிய பட்லர் 37 பந்துகளில் 77 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவியதால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon