மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

கூடிப்பேச கூவத்தூருக்குப் போகலாம் : டி.கே.எஸ்.இளங்கோவன்

கூடிப்பேச கூவத்தூருக்குப் போகலாம் : டி.கே.எஸ்.இளங்கோவன்

அதிமுக உட்கட்சிப் பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது. எடப்பாடி அணி, தினகரன் அணி, ஓ.பிஎஸ் அணி என மூன்றாக உடைந்துள்ளது அதிமுக. இந்நிலையில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணியோடு இணைய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிமுக பிரமுகர்கள் அவ்வப்போது கட்சிப் பிரச்னை குறித்து முதல்வருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசித்து வருகின்றனர். இதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம் அதிமுக-வின் தலைமைக் கழகமாக மாற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைமைச் செயலகம் அதிமுக-வின் தலைமைக் கழகமாக மாற்றப்பட்டு வருகிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும், முதலமைச்சரும் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய இடத்தை அதிமுக-வுக்குள் நடக்கும் அரசியல் கூத்துகளுக்கு பஞ்சாயத்து செய்யவும், அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பயன்படுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது.

தமிழகமே இன்றைக்கு மிகப்பெரிய போராட்டக் களமாக மாறியிருக்கிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளை மூடக்கோரி தாய்மார்கள் போராடுகிறார்கள். வறட்சியின் கொடுமையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. அமைச்சர்கள் கூடிப் பேசவில்லை. ஆனால் ஒன்றாக இணைந்து ஊழல் செய்துவிட்டு இப்போது பிரிந்து நிற்கும் இரு ஊழல் அணிகளும் மீண்டும் ஒருங்கிணைந்து அரசு கஜானாவை காலி செய்வதற்கு தலைமைச் செயலகத்தில் சந்திப்பதும் பேச்சுவார்த்தை நடத்துவதும் வெட்கக்கேடானது.

ஏற்கனவே அதிமுக எம்.பி.க்களின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றபோது அதை தலைவர் கலைஞர் அவர்களே கடுமையாக கண்டனம் தெரிவித்தார். ஆனாலும் அதிமுக-வினர் அரசியல் நாகரிகங்களையும், அரசியல் சட்ட மாண்புகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இதுபோன்ற கட்சிக் கூட்டங்களை தலைமைச் செயலகத்தில் நடத்துவதை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமின்றி, மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை அவர்கள் கோட்டைக்கு சென்று முதலமைச்சரை சந்தித்து அதிமுக-வுக்குள் நடக்கும் அடிதடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். கட்சிப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் அதிமுக கட்சி அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆலோசனை நடத்தலாம். இல்லாவிட்டால் கூவத்தூர் நட்சத்திர விடுதியில்கூட அமர்ந்து ஆலோசனை நடத்தலாம். தயவுசெய்து தமிழகத்தின் நிர்வாகச் சின்னமாக இருக்கும் தலைமைச் செயலகத்தை அரசியல் கட்சிக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை தீர்ப்பதற்கான இடமாக மாற்றாதீர்கள் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon