மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ரஜினி - ரஞ்சித் படம் பேசும் ‘டான் - ஹாஜி மஸ்தான்’!

ரஜினி - ரஞ்சித் படம் பேசும் ‘டான் - ஹாஜி மஸ்தான்’!

நீண்ட நாட்களுக்குப்பிறகு நடிகர் ரஜினிகாந்தை நடிக்க வைத்துப் பார்த்த பெருமை இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உண்டு. அந்தவகையில் ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து ரஜினி-பா.ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் தெற்கு மும்பை பகுதியில் படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 161' திரைப்படம், கடந்த 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மும்பை துறைமுகத்தை கட்டுக்குள் வைத்து கடத்தல் மன்னனாக விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையைப் பேசும் வரலாற்றுக் கதை எனக் கூறப்படுகிறது. ஹாஜி மஸ்தான் மும்பையில் வாழ்ந்த தமிழக மக்களின் நலனுக்காகப் போராடியவர்.

மக்கள் தலைவராக பார்க்கப்பட்ட ஹாஜி மஸ்தான், சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்பவராகவும் ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம்வந்தவர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜி பாய் சரளமாக தமிழ் பேசினாலும், திக்கி திக்கி ஹிந்தி பேசுவார். வெள்ளை நிற ஆடை, வெள்ளை நிற மெர்சிடிஸ் கார், விலையுயர்ந்த சிகரெட்டுகள் என கேங்ஸ்டர் அவதாரத்துக்கு புதிய ஸ்டைலை உருவாக்கியவர். இதன் காரணமாகவே மக்கள் மத்தியில் ஸ்டைல் மன்னனாக போற்றப்பட்டவர்.

இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான 'ஒன்ஸ் அபான் அ டைம்' ஹிந்திப் படம், அமிதாப்பச்சன் நடித்த 'தீவார்' படமும் ஹாஜி மஸ்தானை மையமாகக் கொண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon