மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

வதந்திகளைப் பரப்பினால் வாட்ஸ்அப் அட்மின்களுக்கு சிறை!

வதந்திகளைப் பரப்பினால் வாட்ஸ்அப் அட்மின்களுக்கு சிறை!

இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஒரு செய்தியை வேகமாகவும், லட்சக்கணக்கான மக்களின் கைகளுக்கு நேரடியாகவும் கொண்டுபோய் சேர்த்துவருகிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் அவற்றில் ஒருவருக்கொருவர் கருத்துகளையும், புகைப்படங்களையும், அரட்டைகளையும், நகைச்சுவைகளையும் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இதில் வாட்ஸ்அப் குரூப்கள் முன்னணியில் உள்ளன.

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் ஒரு சம்பவம் பற்றி தகவல் கிடைக்கிறது என்றால், அந்த தகவலின் உண்மைத்தன்மையை அறிந்தபிறகே அதை வெளியிடுகின்றன. அதையும் மீறி ஏதேனும் தவறாக செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது அந்தச் செய்தியால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர முடியும். அதனால், ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடுவதில் பொறுப்புடன் இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அத்தகைய எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் பெரும்பாலானோர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில், சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்டும்படியாகவோ அல்லது மத உணர்வுகளை இழிவுபடுத்துவதாகவோ தகவல் பரிமாறப்பட்டு, அது பரவலாகி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இருப்பினும், சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பி வன்முறையைத் தூண்டும் பெரும்பாலான நபர்கள் சட்டத்தின் நடவடிக்கைகளிலிருந்து தப்பி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் வாட்ஸ்அப் குரூப்களில் வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்பியது தொடர்பான ஒரு புகார் வாரணாசி மாவட்ட ஆட்சியர் யோகேஸ்வர் ராம் மிஸ்ராவிடம் வந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரிக்க உத்தரவிட்டார். இந்தப் புகார் குறித்து விசாரித்த மாவட்ட எஸ்.பி.நிதின் திவாரி, சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரபுவதால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து, இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவுசெய்தார்.

இதையடுத்து, வாரணாசி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. இருவரும் ஏப்ரல் 20ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘வாட்ஸ்அப், ஃபேஸ்புக், உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் குரூப் அட்மின்களாக உள்ளவர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளோம். இந்தியாவில் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இனிமேல், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் குரூப் அட்மின்கள் அதில் பதிவிடப்படும் தகவல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். குரூப்பில் இருப்பவர்கள் அட்மினுக்கு நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். குரூப்பில் ஒருவர் வன்முறையைத் தூண்டும்படியாகவோ, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படியாகவோ தகவல்களை வெளியிட்டால், அட்மின் அதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவிப்பதோடு, அதை பதிவிட்டவரையும் குரூப்பிலிருந்து நீக்க வேண்டும். அவ்வாறு குரூப் அட்மின்கள் செய்யாவிட்டால், அவர் குற்றம் செய்தவராகிறார். அத்தகைய குரூப் அட்மினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள போலியான, அவதூறு செய்திகள் குறித்து காவல் நிலையத்தில் புகாராக அளித்தால், சைஃபர் கிரைம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அடிப்படையில் குரூப் அட்மின்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், அனைவரும் சமூக ஊடகங்களில் கருத்துகளை சுதந்திரமாக வெளியிட உரிமை உண்டு. அதில் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், சமூக ஊடகங்களின் குரூப் அட்மின்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். மேலும் வாரணாசி மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் விரிவாக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon