மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ஜெயலலிதா - சசிகலா உரையாடலை வெளியிடுவேன்: ஜெயஆனந்த் திவாகரன்

ஜெயலலிதா - சசிகலா உரையாடலை வெளியிடுவேன்: ஜெயஆனந்த்  திவாகரன்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா - சசிகலா இடையேயான உரையாடல் வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என்று, சசிகலா சகோதரர் திவாகரன் மகன் ஜெயஆனந்த் திவாகரன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்தது. தற்போதைய சூழலில் இரு அணிகளும் ஒன்றுசேரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பன்னீர் அணியினர் ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், சசிகலா தம்பி திவாகரனின் மகன் ஜெயஆனந்த் தனது முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: 'எங்கள் மீது கொலைப்பழி சுமத்தியிருந்தும், நாங்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடவில்லை. காரணம், அந்த மருத்துவமனையின் பச்சை கவுனில் ஜெயலலிதாவை எதிரிகள் பார்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான். இதுதான் சசிகலாவின் மனம். ஆனால் பன்னீர்செல்வம் கேவலம், அரசியலுக்காக ஜெயலலிதாவை பிணப்பெட்டியில் வைத்து ஓட்டுக் கேட்கிறார்.

உண்மை மிகவும் வலிமையானது. ஒருநாள் ஜெயலலிதாவும் சசிகலாவும் மருத்துவமனையில் பேசிய உரையாடல் வீடியோ வெளிவந்தால், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்கும் பன்னீர்செல்வம், பி.ஹச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் இவர்களை என்ன செய்யலாம்... அந்த நாள் மிக விரைவில்' என்று முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இதே பதிவை, கடந்த 7ஆம் தேதி பதிவிட்டிருந்தார். தற்போது மீண்டும் பதிவிட்டுள்ளார்.ஆக, விரைவில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே நடந்த உரையாடல் வீடியோவை ஜெய்ஆனந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon