மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஹூண்டாய்!

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஹூண்டாய்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த 2016ஆம் ஆண்டில் 5 பில்லியன் டாலர் விற்றுமுதலுடன் (Turn-over), 289 மில்லியன் டாலர் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் எலைட் ஐ-10 மற்றும் கிரேட்டா மாடல் கார்களின் அதீத விற்பனையால்தான் இது சாத்தியமானது என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கார்களைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்துவருவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனம், கார் தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை மற்றும் லாபம் ஆகிய இரண்டிலும் இரு மடங்கு வளர்ச்சியை இந்தியாவில் எட்டியிருந்தது.

குறிப்பாக, ஹூண்டாய் கிரேட்டா மாடல் மட்டுமே சுமார் 80,000 கார்கள் வரையில் விற்பனையாகியதோடு, நிறுவனத்தின் வருவாயில் ரூ.10,000 கோடியை தனது சார்பாக ஈட்டித் தந்தது. இதனால் கடந்த ஆண்டில் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 5 பில்லியன் டாலர் விற்றுமுதலைக் கொண்டு சாதனை படைத்தது. இந்நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் கடந்த ஆண்டில் 73 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னணிச் சந்தையாக இந்தியா திகழ்கிறது. எனவே, இங்கு அதிக கவனம் செலுத்தி, அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் களமிறங்குகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் தமிழக எல்லைப் பகுதியில் புதிய வாகன உற்பத்தி ஆலை ஒன்றை இந்நிறுவனம் அமைக்கவுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த புதிய கிராண்ட் ஐ-10 மற்றும் எக்ஸ்-செண்ட் மாடல் கார்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இக்கார்களுக்கான முன்பதிவு தீவிரமாக உள்ளது. அதேபோல, வருகிற ஆகஸ்ட் மாதத்தில் புதிய வெர்னா மாடல் காரையும் இந்நிறுவனம் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon