மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டம்: செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.!

 உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டம்: செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.!

அதிமுக-வுக்குள் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ளநிலையில், அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தன் பங்குக்கு, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறார்.

ஜெயலலிதா அறிவித்த மருத்துவக் கல்லூரி கட்டடப் பணியை தொடங்கவிடாமல் வேறு இடத்துக்கு மாற்ற, தம்பிதுரையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் முயன்று வருகிறார்கள்' என்று குற்றம்சாட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி.

மேலும் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகளைத் தொடங்க வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கக்கோரி செந்தில்பாலாஜி கரூர் ஆய்வாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட்டபோது, பண விநியோக புகார் எழுந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. சில மாதங்கள் கழித்து, ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அரவக்குறிச்சிக்கு நடந்த தேர்தலில் செந்தில்பாலாஜி வெற்றிபெற்றார். எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் என்ற செந்தில்பாலாஜியின் கனவு நனவாகவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு செந்தில்பாலாஜிக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை . கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் செந்தில்பாலாஜியின் அரசியல் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்து வருவதாகவும், ஆகவேதான் அவர்களைக் குறிவைத்து இப்போது போராட்டம் நடத்த செந்தில்பாலாஜி முடிவுசெய்திருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon