மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

அரசியல்வாதிகளின் தவறான உத்தரவை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது : ராஜ்நாத் சிங்

அரசியல்வாதிகளின் தவறான உத்தரவை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது : ராஜ்நாத் சிங்

குடிமைப்பணிகள் தினத்தையொட்டி, வியாழக்கிழமை (நேற்று) டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘குடிமைப்பணி அதிகாரிகள் அனைவரும் நடுநிலைமையுடன் கடமையைச் செய்ய வேண்டும். முடிவு எடுப்பதில் எந்தவித தயக்கமும் காட்டக் கூடாது. அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்தால் சட்ட திட்டத்தை எடுத்துக்காட்டும் துணிச்சலுடன் அனைவரும் இருக்க வேண்டும். அரசுக்கு தலைமை வகிக்கும் அரசியல்வாதிகள் தவறாக செய்யச்சொன்னால் அது சட்டவிதிகளுக்குப் புறம்பானது என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். மேலும் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திடாதீர்கள்.

சமூகத்தில் மாற்றம் ஏற்பட சிறப்பான பங்களிப்பு வழங்குபவர்கள் அதிகாரிகள் மட்டும்தான். ஆட்சி நிர்வாகப் பணி அதிகாரமிக்க பணி. அதேவேளையில், அந்த அதிகாரம் மிகப்பெரிய பொறுப்பையும் கடமையையும் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. ஆட்சி நிர்வாகப் பணியில் உள்ளவர்கள் கடமையாற்றும்போது நடுநிலைமையை தவறவிடக் கூடாது. இதுவும் இந்தப் பணியின் மிக முக்கிய அம்சம். நடுநிலைமை தவறும்போது முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படும்.

எனவே, சில அதிகாரிகள் முடிவு எடுக்காமல் ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த தயக்க நிலைமையால் நாட்டின் நலனுக்கு தீங்கு ஏற்படுகிறது, தேவைப்பட்டால் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யுங்கள். முடிவு எடுப்பதில் எந்தவிதத் தயக்கமும் இருக்கக் கூடாது. இந்திய ஆட்சி அமைப்பில் வெற்றிட நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை. இதற்கு ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் பொறுப்புணர்வே காரணம்’ என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon