மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

விவசாயப் பிரச்னைகளை படமாக்கும் இயக்குநர்!

விவசாயப் பிரச்னைகளை படமாக்கும் இயக்குநர்!

தமிழகத்தின் தலையாய பிரச்னைகளில் ஒன்றான விவசாய பிரச்னை இன்று நாட்டையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. வறட்சி நிவாரணம் வழங்குதல், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தல் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் நெடுவாசல் போன்ற இடங்களில் விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராகவும் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்த சமகால பிரச்னைகளை மையமாக வைத்து ‘தெரு நாய்கள்’ என்ற படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குநர் செ.ஹரி உத்ரா. இதில் அப்புக்குட்டி, பிரதிக், ‘கோலி சோடா’ நாயுடு, மைம் கோபி, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கின்றனர். அக்‌ஷதா கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் ஹரி உத்ரா கூறும்போது, ‘இன்றைக்கு விவசாய நிலங்கள் எல்லாத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கூறு போட்டுக்கிட்டு இருக்காங்க. தஞ்சாவூர்ல மீத்தேன், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகள்ல ஹைட்ரோ கார்பன் அப்டின்னு நம்ம விவசாய நிலங்களை ஒண்ணுமில்லாம பண்ணிக்கிட்டு இருக்காங்க. கார்ப்பரேட்களால் நம்ம விவசாயம் எப்படி பாதிக்கப்படுதுன்னு இந்தப் படத்துல சொல்றோம்.

விவசாயம் அழிஞ்சா நாமளும் அழிஞ்சுட்டோம்னு அர்த்தம். அந்த விஷயத்தை கொஞ்சம் ஆக்ரோஷமா சொல்ற படமா இது இருக்கும். அரசியல்வாதிகளையும் கார்ப்பரேட்டுகளையும் எதிர்த்துப் போராடுறது பெரிய சவால்தான். மக்கள் நினைத்தால் எதையும் மாற்றலாம் அப்படிங்கிற கருத்தை இந்தப் படம் சொல்லும். விவசாயிகளையும் விவசாயத்தையும் உயர்த்திப் பேசுற படமா இது இருக்கும். ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. படத்தை சுசில் குமார் தயாரிச்சிருக்கார். ஹரிஷ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்’ என்று தெரிவித்துள்ளார். இவர் சில படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon