மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்கணும்: மாஃபா.பாண்டியராஜன்

அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்கணும்: மாஃபா.பாண்டியராஜன்

‘ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்கள் நிபந்தனைகளில் விடாப்பிடியாக உள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை, தினகரன், சசிகலா குடும்பத்தினரை முழுமையாக நீக்கம் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து, இருதரப்பிலும் பேச்சுவார்த்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்.பி., பன்னீர்செல்வம் தரப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியதைத் தொடர்ந்து, மாஃபா.பாண்டியராஜன் நேற்று இரவு தனியார் டி.வி. நிகழ்ச்சியின்போது பேசுகையில் கூறியதாவது, “அதிமுக-வின் இரு அணிகள் இணைவதில் சிக்கல் ஏற்படுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருக்கும் அமைச்சர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசிவருவதுதான் காரணம். ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “ஜெயலலிதா மரணம் குறித்து ஆளுநர் தெரிவிக்கும்வரை தங்களுக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையளிக்க மூன்று குழுக்கள் இருந்தது மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து சாதாரண மக்களுக்கும் இன்னும் சந்தேகம் உள்ளது. எனவே, மாநில அரசே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் வர்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. அதன் பின்னர் சசிகலாவை முதல்வராகத் தேர்வு செய்வதற்கு கையெழுத்து வாங்கியதும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் சசிகலாவை எனக்குத் தெரியாது. ஜெயலலிதாதான் என்னை தேர்வு செய்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தம்பிதுரைதான் சசிகலா முதல்வராக வேண்டும் என முதன்முதலாக அறிக்கை கொண்டு வந்தார். அப்போது கட்சி உடைந்துவிடக் கூடாது என்றுதான் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்தோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணம் கொடுத்தது நிரூபணம் ஆகியுள்ள நிலையில் ஓ.பி.எஸ். அணிமீது எந்த புகாரும் கிடையாது. இரட்டை இலை சின்னத்தில் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும்” என்றும் கூறினார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon