மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சம்மன் விவகாரம்: கால அவகாசம் கேட்ட தினகரன்!

சம்மன் விவகாரம்: கால அவகாசம் கேட்ட தினகரன்!

சம்மன் விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் முன் ஆஜராக டி.டி.வி.தினகரன் மூன்று நாள்கள் அவகாசம் கோரியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் உரிமை கோரினர். இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்து உத்தரவிட்டது. மேலும், இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க, இரு தரப்பினரையும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தநிலையில், இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில் தினகரனிடம் இருந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ரூ.50 கோடி பேரம் பேசி முன்பணம் வாங்கியது தெரியவந்தது. அதையடுத்து, சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னை வந்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் ஆகியோர் விமானம் மூலம் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு சென்னை வந்தனர். சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லஞ்சப் புகார் தொடர்பாக டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரனிடம் சம்மன் வழங்குவதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 11 மணி அளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவருடைய இல்லத்துக்கு சென்று சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் தினகரனிடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் தொலைபேசி உரையாடல் குறித்தும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்மனை டெல்லி போலீஸார் தினகரனிடம் வழங்கினர். நாளை ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை தினகரன் ஆஜராக வேண்டுமென டெல்லி போலீஸார் சம்மன் வழங்கினர். இந்நிலையில் டெல்லி போலீஸார் முன் ஆஜராகுவதற்கு டி.டி.வி.தினகரன் மூன்று நாள்கள் அவகாசம் கோரி மனு கொடுத்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்துள்ளதால், இந்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனுக்குக் கால அவகாசம் கொடுக்கப்படுமா என்பது இன்று ஏப்ரல் 21ஆம் தேதி மாலைக்குள் தெரியவரும்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon