மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

நீட் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

நீட் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

‘தமிழக சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்ககோரி கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில்கொண்டு இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் நீட் தேர்வு குறித்து தொடர்ந்து தங்களது கருத்தையே வலியுறுத்தி வருவதால், தமிழக மாணவர்கள் என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வால் 98 சதவிகிதம் மாணவர்கள் பாதிப்படைவார்கள். மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை தவிர்ப்பது குறித்து பிரதமர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon