மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

டி.என்.பி.எஸ்.சி-க்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

டி.என்.பி.எஸ்.சி-க்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், டி.என்.பி.எஸ்.சி-க்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2016ஆம் ஆண்டு, ஜனவரி 31ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், சுப்ரமணியன், புண்ணியமூர்த்தி, எம்.ராஜாராமன், ஏ.வி.பாலுசாமி ஆகிய 11 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்று திமுக முன்னாள் எம்.பி-யும் செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. காலியிடங்கள் 2013இல் உருவாகி விட்டன. அவற்றை நிரப்ப மூன்று ஆண்டுகளாக எந்த ஆர்வமும் காட்டப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியிடும் கால கட்டத்தில், பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில், எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. பயோ டேட்டா அடிப் படையில்தான், கவர்னருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் பின்னணியை சரிபார்ப்பது, போலீஸிடம் அறிக்கை பெறுவது, பயோ டேட்டாவில் உள்ள விவரங்களைச் சரிபார்ப்பது என 24 மணி நேரத்தில், அத்தனையும் சாத்தியப்படாது. இதில் நடைமுறை குறைபாடுகள் கவர்னரின் கவனத்துக்கு வராமல் தப்பியுள்ளன.

நேர்மை, பாரபட்சமின்மை, தகுதி, திறமை, பொருத்தம் என அனைத்தையும் பரிசீலிப்பதற்கு, உன்னிப்பான விசாரணை இருக்க வேண்டும். அது, இந்த நியமனங்களில் இல்லை. எனவே, சட்டப்படி, இதை நியமனங்களாக கருத முடியாது. இதில், வெளிப்படைத்தன்மை இல்லை. அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாததால், இந்த நியமனங்கள் ரத்து செய்யப்படுகின்றன’ என்று உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஜனவரி 31ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நியமன அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமமூர்த்தி பெயரை மீண்டும் பரிசீலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து, புதிய உறுப்பினர்களை நியமிக்கும்படி 2017ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உத்தரவிட்டது. அதையடுத்து காலியாக இருந்த 11 உறுப்பினர்களில் தற்போது ஐந்து உறுப்பினர்களை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்பேரில், டி.என்.பி.எஸ்.சி-க்கு புதிய உறுப்பினர்களாக ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம், சுப்பையா, பாலுசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon