மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

மஞ்சிமா: முதல் டான்ஸுக்கே ஓமன் வரை பாராட்டு!

மஞ்சிமா: முதல் டான்ஸுக்கே ஓமன் வரை பாராட்டு!

நடிகை மஞ்சிமா மோகனுக்கு ‘இப்படை வெல்லும்’ திரைப்படம், தமிழில் மூன்றாவது திரைப்படம். முதல் படம் கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’, இரண்டாவது விக்ரம் பிரபுவுடன் ‘சத்ரியன்’, மூன்றாவது உதயநிதிக்கு ஜோடியாக ‘இப்படை வெல்லும்’.

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவரது முந்தைய படங்களிலும்கூட Wide-Angle ஷாட்கள் மிகப் பிரபலமானவை. தனது நடிகர்கள் - நடிகைகளை வைத்து எல்லா ரிஸ்கையும் எடுக்கக்கூடியவர்.

‘சிகரம் தொடு’ திரைப்படத்தின் ஒரு சேஸிங் சீனில் காரிலிருந்து குதிக்க வேண்டிய காட்சியில் விக்ரம் பிரபுவை தள்ளிவிட்டு இவரும் எகிறியதெல்லாம் இந்தச் செய்தியை டைப் செய்யும்போதே கண்முன் வந்துசெல்கிறது.

‘இப்படை வெல்லும்’ திரைப்படத்துக்காக இவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? ஒரு பாடல் காட்சியை, ஓமன் நாட்டின் பாலைவனப்பகுதியில் எடுத்திருக்கிறார். இதைப்பற்றி அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் மர்வான் யூசுப், கௌரவை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ‘எங்களது நாட்டை பாலைவன பூமியென சுற்றுலா வருபவர்கள்கூட தவிர்க்கும்போது, ஷூட்டிங்குக்காக வந்து, இத்தனை அழகாக படமாக்கியிருக்கிறீர்களே’ என அவர் மகிழ்ச்சியடைந்ததாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

அப்படிப்பட்ட ஓர் இடத்தில் டான்ஸ் ஆடியிருக்கும் மஞ்சிமா மோகன் எப்படி உணர்ந்திருக்கிறார்?

நான்கு நாள்கள் அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினோம். முதல் நாள் ஒரு தீவில் படப்பிடிப்பு நடைபெற்றது. 39 டிகிரி செல்ஷியல் வெயிலில் அந்தப் படப்பிடிப்பை நடத்தினோம். அனைவரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை செய்தார்கள். ஆனால், காட்சிகள் நன்றாக வந்திருப்பதைப் பார்த்தபோது அந்த வெயிலில் கஷ்டப்பட்டது மறந்து போய்விட்டது. நான் நடனமாடிய முதல் பாடலுக்கே இத்தனை பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று Behindwoods-க்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

‘மஞ்சிமா மோகன் டான்ஸ் ஆடியதே இல்லையா?’ என்ற கேள்வி இப்போது, மஞ்சிமா மோகனின் தீவிர ரசிகனுக்கு எழும். அப்போது ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தை ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்த்து இல்லை என்பதை அவர்கள் உணர்வார்கள். ‘தள்ளிப் போகாதே’ பாடலில்கூட நின்றுகொண்டிருக்கும் மஞ்சிமா மோகனை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சிம்பு இழுத்துத் தள்ளுவாரே தவிர, நடனத்துக்கு அங்கு வேலையே இருக்காது. எனவே, இன்னும் பல வருடங்கள் தொடரப்போகும் மஞ்சிமா மோகனின் தமிழ்த் திரையுலக வரலாற்றில் அவரது முதல் டான்ஸ் என்ற பெருமையை ‘இப்படை வெல்லும்’ திரைப்படமும், அவருடன் நடனமாடியது உதயநிதி என்றும் பதிவு செய்ய வேண்டும்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon