மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சிறப்புக் கட்டுரை: இப்படியும் தண்ணீரைச் சேமிக்கலாமா?

சிறப்புக் கட்டுரை: இப்படியும் தண்ணீரைச் சேமிக்கலாமா?

பெங்களூருவைச் சேர்ந்த ஏ.ஆர்.சிவக்குமார் என்பவர் 22 வருடங்களாகத் தனது வீட்டுக்குத் தண்ணீர் இணைப்பு எடுத்ததும் இல்லை; வெளியே காசு கொடுத்து தண்ணீர் வாங்கியதும் இல்லை. தண்ணீருக்காக என்ன செய்கிறார்கள் இவரது குடும்பத்தினர்? வாருங்கள் காண்போம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.எஸ்ஸின் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிபவர் சிவக்குமார். இவர் தனது மனைவி சுமா, மகன் அனுப் ஆகியோருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு இதுவரையிலும் தண்ணீர் இணைப்பு எடுத்ததே இல்லை. இதனால் தண்ணீருக்காக இவர் கட்டணம் செலுத்தியதும் இல்லை. குடிநீர் உள்ளிட்ட எல்லாத் தேவைகளுக்கும் முழுக்க மழை நீரை மட்டுமே சேகரித்து பயன்படுத்துகிறார்.

சிறு வயதில் சிவக்குமார் குடும்பம் பெங்களூருவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்தது. அப்போது தண்ணீருக்காக இவருடைய இரு சகோதரிகளும் வெளியே சென்று மிகவும் சிரமப்பட்டு கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய சூழலில்தான் சிவக்குமார் வாழ்ந்து வந்தார். பின்னர் பெங்களூருவுக்கு வந்து குடியேறினார். அதன் பின்னர் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு பெங்களூருவில் இவர் சொந்தமாக வீடு கட்டினார். வீடு கட்டும்போதே ‘கிரீன் ஹவுஸ்’ முறையில் வீடு கட்டப்பட்டது. மழை நீர் சேகரிக்கும் திட்டத்துடன் கட்டப்பட்ட இந்த வீட்டில், வீட்டுக்குள்ளேயே 40/60 என்ற வகையில் பிரம்மாண்டமான தொட்டி கட்டப்பட்டுள்ளது. வீட்டு மாடியிலும் மழை நீர் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடு முழுக்க சிறிய சிறிய நீர்த்தொட்டிகள், மரங்கள், நீர்வாழ்த் தாவரங்கள், மீன்கள் எனப் பசுமையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகருக்கு ஆண்டுக்கு 900 முதல் 1000 மில்லி மீட்டர் வரை மழை பொழிவு கிடைக்கிறது. மழை பெய்யும்போது கிடைக்கும் நீர் அப்படியே சுத்திகரிக்கப்பட்டு தொட்டியில் சேமிக்கப்படுகிறது. இதற்காக வீட்டின் மேற்கூரையில் சிறிய எளிமையான சுத்திகரிப்பு மையம் செயல்படுகிறது. எந்தச் சமயத்தில் மழை பெய்தாலும் தொட்டியில் தண்ணீர் சேர்கிறது. இந்தத் தொட்டியில் அதிகபட்சமாக 45 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேகரிக்க முடியும். மழை நீரைச் சேமிக்கும்போதே அதைச் சுத்தம் செய்ய இவர் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய பாப் அப் பில்டர் சாதனத்தைப் பயன்படுத்துகிறார். அதுமட்டுமின்றி பயன்படுத்தப்பட்டத் தண்ணீரையும்கூட சிவக்குமார் குடும்பத்தினர் வீணடிப்பதில்லை. வாஷிங் மெஷினில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் தண்ணீரை மறுசுழற்சி செய்து கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

சமையலறையில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் தண்ணீர் தனிக்குழாய் வழியாக வீட்டுக்கு வெளியே வருகிறது. அது அப்படியே சேகரிக்கப்பட்டு செடிகளுக்கு ஊற்றப்படுகிறது. மழை நீர் சேகரிப்பதிலும் தண்ணீரைச் சிக்கனமாக செலவழிப்பதில் நாட்டுக்கு முன்மாதிரியாக இருக்கிறது சிவக்குமாருடைய குடும்பம். இது குறித்து சிவக்குமார் கூறுகையில், “வீட்டைக் கட்டும்போதே திட்டமிட்டுக் கட்ட வேண்டும். மழை நீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல் சுத்திகரிப்பு செய்வதும், மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதும் முக்கியமானதாகும். இது எங்கள் குடும்பத்தின் கூட்டு முயற்சி. எனது மனைவி சுமா, அவரது தங்கை வாமிகா, மகன் அனுப் ஆகியோர் எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அதனால்தான் என்னால் இந்தக் காரியத்தை செய்ய முடிந்தது.

பெங்களூருவைப் பொறுத்தவரை ஆயிரம் மில்லி மீட்டர் மழை பெய்தால், அதில் இருந்து ஆண்டுக்கு 2.3 லட்சம் லிட்டர் தண்ணீரை நம்மால் சேகரிக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆண்டுக்கு இது மிகவும் அதிகம். இங்கு வருடத்தில் 100 நாள்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அதனைக் கருத்தில்கொண்டுதான் 45 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை அமைத்தேன். ஒரு வீட்டுக்கு ஒரு நாளைக்கு 400 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தேவையை விட 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அதிகமாகவே சேகரிக்க முடிகிறது. நாங்கள் குடிப்பது கூட மழை நீர்தான். குடிநீர் கூட காசு கொடுத்து வாங்கியதே இல்லை” என்கிறார்.

தண்ணீர் வீணடிப்பு என்பது தடுக்கவே முடியாத ஒன்றாகிவிட்ட இந்தச் சமூகத்தில் மழைநீரைச் சேமித்து பயன்படுத்திப் பல ஆண்டுகளாக வாழ்ந்து காட்டி வரும் சிவக்குமார் நிச்சயம் இந்த உலகுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் தான் அமைந்திருக்கிறார். மனிதன் மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை வாழ்வாதாரமாக இருக்கின்ற தண்ணீரை அடுத்த தலைமுறை சந்ததிகளுக்கும் சாத்தியப்படுத்த இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகள் அவசியமானதாகவே உள்ளது. மழை நீரைச் சேமிப்போம். அவசியமற்று தண்ணீரை வீணடிப்பதைத் தடுப்போம்.

தொகுப்பு: நிகிதா புரி

நன்றி: பிசினஸ் ஸ்டாண்டர்டு

தமிழில்: பிரகாஷ்

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon