மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

திராவிட இயக்க தமிழ் ஆளுமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

முனைவர் வா.மு.சே.ஆண்டவர்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள் (21.4.2017) சிறப்புக் கட்டுரை

புரட்சிக்கவிஞரின் சிந்தனைகளும், கவிதைகளும், அவரின் செயல்பாடுகளும் வியப்பூட்டுபவை. தமிழ்க் கவிஞர்களில் பலர் திராவிட இயக்கத்தின் ஊற்றுகளாக விளங்கியவர்கள். அரசியலில் அவர்கள் இயங்கினாலும் கவிஞர்கள் என்ற இறுமாப்போடு இயங்கியவர்கள். மகாகவி பாரதியார் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. காந்தியடிகளை வாழ்க நீ எம்மான் எனப் புகழ்ந்தாலும், விதவை தொடர்பான கருத்துகளில் காந்தியார் கொள்கையோடு நான் முரண்படுகிறேன் என்று அறிவித்தவர் பாரதியார். புரட்சிக்கவிஞரும் பெரியாரிய கொள்கைகளின் முரசமாக விளங்கினாலும், சில விடயங்களில் பெரியாரோடு முரண்பட்டிருக்கிறார். பெரியாரும் அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டிருக்கிறார். குயில் பத்திரிகையில் கூலித்தொண்டு கூடாது என பாவேந்தர் எழுதிய தலையங்கம் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

பாவேந்தரின் கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை, திராவிட இயக்க எழுச்சியாலும், மொழிப்போர் விளைவாலும் தமிழ் மொழி மீது உணர்வுரீதியாகவும் அறிவுரீதியாகவும் பற்றுக்கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தொடக்க காலகட்டங்களில் தேச விடுதலைப் போராட்டக் கவிஞராகத்தான் தன் கவிதைப் பணியைத் தொடங்குகிறார்.

முனைவர் .இரா. இளவரசு எழுதிய, ‘இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்’ என்ற நூல், பாரதிதாசனின் விடுதலைப் போராட்டக் கவிதைகளை விரிவாக விளக்குகிறது. இவர் பாவேந்தரின் முற்கால வாழ்க்கையான 1911 முதல் 1937 வரையான காலத்தை இந்திய விடுதலை இயக்கச் சார்புகாலம் எனக் குறிக்கிறார். 1938இல் தொடங்கிய கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டம் பாவேந்தரை தேசியத்திலிருந்து தமி்ழ் தேசியத்துக்கு கொண்டுசேர்த்தது எனலாம்.

1906, 1907ஆம் ஆண்டுகளில் கல்கத்தா மற்றும் சூரத் காங்கிரஸ் மாநாடுகளில் கவிஞர் பேராளராகக் கலந்துகொண்டு, அதன் செய்திகளை காங்கிரஸ் யாத்திரை என 1908இல் தந்தார் என இளவரசு குறிக்கிறார்.

1920ஆம் ஆண்டு காந்தியடிகளால் தொடங்கப்பெற்ற ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக பல கவிதைகளை பாரதிதாசன் எழுதியுள்ளார். வங்கத்தின் எழுச்சிகளையும் எழுதியுள்ளார்.

மெய்திருக்கும் உன் சமுகம் முப்பது கோடி

வங்கத்து வீரருன்றன் வாழ்க்கையிலே சம்பந்தி

தேசத் துலுக்கரெலாம் தேவியுன்றன் அண்ணன் மார்

என, சகோதரத்துவ உணர்வைக் காட்டுகிறார்.

காந்தியடிகளின் கதர் கொள்கையை ஆதரித்து ‘கதர் இராட்டினப் பாட்டு’ என்ற நூலை எழுதியுள்ளார்.

அன்னியர் நூலை தொடோம் என்ற சேதி

அறைந்திடடா புவி முற்றும் எங்கள்

அறுபது கோடித் தடக்கைகள் ராட்டினம்

சுற்றும் சுற்றும் சுற்றும்

விதி நமக்கு வாய்த்த துண்டே

வேற்றுவர் கைபார்க்க நாம்

விளையும் பஞ்சில் விரல் பொருத

விடுதலை நீர் காண்பீர்

என உரைக்கிறார் கவிஞர்.

மேயோ என்ற அன்னிய நாட்டுப் பெண்மணி, இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள். அவர்களுக்கு விடுதலை உணர்வு கிடையாது எனும்நோக்கில் 1927இல் ‘இந்தியத் தாய்’ என்ற நூலை வெளியிட்டார். இதையெதிர்த்து, ‘மேயே ஒரு பன்றி’ என்ற நூலை பாவேந்தர் எழுதியதாகவும் அது இன்று கிடைக்கவில்லையென்றும் இளவரசு குறிக்கிறார். தீண்டாமை தொடர்பாக பாவேந்தர் பல பாடல்கள் இயற்றியுள்ளார். தீண்டாமை என்ற பேயை இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டும் என்கிறார் கவிஞர்.

தீண்டாமை என்னுமொரு பேய் இந்திய

தேசத்தினில் மாத்திரமே திரியக் கண்டோம் எனில்

ஈண்டு பிற நாட்டில் இருப்போர் செவிக்

கேறியதும் இச்செயலை காறியுமிழ்வார்

என, தீண்டாமையின் இழிவைச் சுட்டுகிறார். தாழ்த்தப்பட்டோரை எதிர்ப்பவர்களை கவிதைகளால் தாக்குகிறார் கவிஞர்.

கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவை எதிர்ப்பவர்களைச் சாடுகிறார் கவிஞர்.

இமைச் சாரலில் ஒருவன் இருமினான்

குமரி வாழ்வான் மருந்து கொண் டோடினான்

என, தேசிய ஒற்றுமையைச் சுட்டுகிறார். மொழி ஒன்றே தேச ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் அம்மொழி அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியாக இருக்க வேண்டும் என கவிஞர் வலியுறுத்துகிறார்.

அவ்வவ் வினத்திவ் அவ்வம் மொழிகளைச்

செம்மை செய்து செழுமை ஆக்கி

இணைத்து மக்கள் எவர்க்கும் பரப்பும்

ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும்

என்பதென் எண்ணம்

என்று, தன் எண்ணத்தை உரைக்கிறார் பாவேந்தர்.

இருபதாம் நூற்றாண்டு அரசியல் நிகழ்வு பற்றிய கவிதைகளை தேசியம், திராவிடம் என்ற இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம்.

1925ஆம் ஆண்டில் பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கம் தொடங்கி தேசியக் கருத்தோட்டத்திலிருந்து திராவிடக் கருத்தோட்டத்தை தொடங்கினார். காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் பார்ப்பனர் அல்லாத இயக்கங்களும் தோன்றுகின்றன. இந்த இயக்கங்கள்தான் வருணாசிரம தருமத்தை எதிர்த்தும், வகுப்புவாரி உரிமைக்கும் குரல் கொடுத்தன. தென்னகத்தில் தோன்றிய திராவிடக் கருத்தோட்டம் இன்று வரை தமிழகத்தில் இருந்து வருகிறது. இந்த மாற்றத்துக்கான காரணம் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் சார்ந்து, கவிஞர்கள் புதுமையான சமுதாயத்தைப் பாடும் நெறிக்குட்பட்டு கவிதைகள் படைத்தார்கள். தொடக்க காலத்தில் காங்கிரஸிலிருந்து வெளியேறி திராவிடத்தை முன்னிறுத்திய பெரியார்போலவே, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் தொடக்க காலகட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தைப் பற்றி பல பாடல்கள் இயற்றினாலும் பெரியாரின் தன்மான இயக்கம் தொடங்கியதும், கவிஞர் புரட்சித்தன்மைகள் செறிந்த கவிதைகள் வாயிலாக தமிழ்க் கவிதை மரபை மடைமாற்றம் செய்கிறார்.

திராவிட தேசியம் பற்றிய கருத்துகளை ‘குயில்’ என்ற, தனது இதழில் பாரதிதாசன் கவிதைகளாக வடிக்கிறார். 1939ஆம் ஆண்டு கட்டாய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழங்கினார். இது, பின்பு நீட்சிபெற்று கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட நாடு திராவிடருக்கே என மாறியது. திராவிடர் மொழி பற்றியும் திராவிடர் கலை பற்றியும் பாவேந்தர் கவிதைகள் வடித்தார்.

1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்திய விடுதலை அறிவிக்கப்பட்டது. இதை பெரியார், திராவிடருக்கு விடுதலை இல்லை என்றுகூறி, விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தார். மத்திய அரசுக்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட முரண்பட்ட நிலைகள் முற்றுப்பெற்றன. அண்ணாதுரையும் கருத்து மாறுபாடு காரணமாக தனிப்பாதை அமைப்பதற்கு இதுவும் காரணமாகிறது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி சி.என்.அண்ணாதுரை தலைமையில் உள்ளவர்களை பெரியார் கண்டித்துக் கூறியவற்றை கவிதையாகத் தருகிறார் பாவேந்தர். 1960ஆம் ஆண்டில் திராவிடம் தவறு திருத்தமிழே சரி என்று, சம்பத் அவர்கள் தலைமையில் உள்ளவர்கள் தி.மு.க-விலிருந்து பிரிந்து தமிழ் தேசியக் கட்சி தொடங்குகின்றனர். பாவேந்தரோ திராவிடமே சரி என இந்நிகழ்வு குறித்து தன் கருத்தை கூறுகிறார்.

திராவிட நாடா திருத்தமிழ் நாடா

எதை மீட்க எண்ணம்

என்று கேட்டு,

திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர்

தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர்.

என்ற பாவேந்தரின் தமிழ்ப் பற்று திராவிடப் பற்றுடன் கலந்து தமிழ் இயக்கம் நூலை எழுதவைத்தது.

செந்தமிழை நாம் மீட்க வேண்டும் மேலும்

செந்தமிழை ஆட்சிமொழி ஆக்க வேண்டும்

செந்தமிழ் நிலப்பகுதி இன்னும் உண்டு

திறத்தாலே அவைகளையும் மீட்க வேண்டும்.

என்றும்,

சலுகை போனால் போகட்டும்

அலுவல் போனால் போகட்டும்

தலைமுறை ஒரு கோடி கண்ட என்

தமிழ் விடுதலையாகட்டும்

என்று பாடிச் சென்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

*

கட்டுரையாளர் குறிப்பு: முனைவர், வா.மு.சே.ஆண்டவர்

தமிழ் இணைப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 30

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon