மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை!

பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை!

‘கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) மற்றும் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) ஆகியவற்றை தவிர்த்து, தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று சி.பி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.

மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி சி.பி.எஸ்.இ. ஏப்ரல் 19ஆம் தேதி ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்கிற வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக வேறு பாடப் புத்தகங்களை வாங்கி வரச்சொல்லி மாணவர்களை ஒரு சில பள்ளி நிர்வாகங்கள் நிர்ப்பந்தம் செய்வதாக சி.பி.எஸ்.இ-க்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களுக்குப் பதிலாக வேறு பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டது.

இருப்பினும் பள்ளிகள் மாணவர்களை சி.பி.எஸ்.இ./என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என அடிக்கடி புகார்கள் வருவதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பில், ‘இதுதொடர்பான புகார்களை சி.பி.எஸ்.இ. வாரியம் முக்கியமானதாக எடுத்துக்கொண்டுள்ளது. தனியார் விற்பனையாளர்களிடம்தான் புத்தகங்கள், சீருடைகள், எழுதுபொருள்கள் வாங்க வேண்டும் என பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தும் ஆரோக்கியமற்ற போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிகள் சமூகச் சேவைக்காகச் செயல்படுகிறது. இது, ஒரு தொழில் கிடையாது. எனவே, வணிக நடவடிக்கைகளில் பள்ளிகள் ஈடுபடக்கூடாது’ என்று எச்சரித்துள்ளது.

முன்னதாக, சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஆரோக்கியமான பெண்களின் உடலமைப்பின் அளவு 36-24-36 ஆக இருக்க வேண்டும். சர்வதேச அழகிப்போட்டிகளில் பெண்களின் உடல் அளவுக்கு இதுவே அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, புத்தகத்தை வெளியிட்ட தனியார் வெளியீட்டாளர் மீது சி.பி.எஸ்.இ. சார்பில் டெல்லி பிரீத் விகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon