மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

மக்களைத் தேடும் கலைஞன் - ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி

மக்களைத் தேடும் கலைஞன் - ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி

“சினிமாவின் எதிர்காலம், அசுரத்தனமாக பணத்தை செலவு செய்து திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நிறுவனங்களின் நிர்வாக பிடிகளிலிருந்து அதை விடுதலை செய்வதில் அடங்கியிருக்கிறது என நான் நம்புகிறேன். இது வெறும் கற்பனையல்ல. நிழற்பட தொழில் நுட்பங்கள் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. விரைவில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது, ஒரு நாவலை தட்டச்சு செய்து எழுதுவது போல ஆகிவிடும் என்பது எனது நம்பிக்கை.”

– ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ரஷ்யன் கலாசார மையத்தில் இன்று (21/4/2017) மாலை ஆறு மணிக்கு இந்தோ-ரஷ்யன் சினிமா என்ற நிகழ்வு நடக்கவுள்ளது. இதில் ‘ஸ்டாக்கர்’திரைப்படமும் திரையிடப்படுகிறது.

முப்பது வருடங்களுக்கு முன் வரை தார்க்கோவ்ஸ்கி என்பது வெளியுலகில் அதிகம் அறியப்படாத பெயர். ரஷ்யாவில் அரசியல் கலாசார மாற்றங்களுக்கு வித்திட்ட ‘பிரஸ்த்ரோய்க்கா’வுக்குப் பின் ரஷ்ய அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட, எண்பதுகளில் முக்கிய ரஷ்ய இயக்குநர்களின் திரைப்படங்கள் உலகம் முழுவதற்கும் காணக்கிடைத்தன.

திரைப்படக் கலையின் வளர்ச்சியில் ரஷ்ய இயக்குநர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. திரைப்பட உருவாக்கத்துக்கான ’மாண்ட்டாஜ்’ கோட்பாட்டை முன்வைத்த ரஷ்யாவின் முதல் திரைப்படமான ‘பேட்டால்சிப் பொய்ட்மிகின்’(Battleship Potemkin) என்ற திரைப்படத்தை இயக்கிய செர்கேய் ஐஸென்ஸ்டைன் (Sergei Eisentein), ஆரம்ப கால ரஷ்ய இயக்குநர்கள் திரைப்படக் கலையின் தூண்களாக மதிக்கப்படுபவர்கள். தெசிகா வெர்ட்டோவ் போன்ற பல அற்புதமான படைப்பாளிகளை அளித்த நாடு ரஷ்யா.

தார்க்கோவ்ஸ்கி 1932ஆம் வருடம் ஏப்ரல் 4ஆம்தேதி மாஸ்கோவின் அருகிலுள்ள ஜவராச்சியில் பிறந்தார். அவரது தந்தை தன் மனைவியை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் வாழச் சென்று விட்டார். தார்க்கோவ்ஸ்கி பள்ளிப்படிப்புடன் ஏழு வருடங்கள் இசை கற்றார். மூன்று வருடங்கள் ஓவியக் கல்வியும் தொடர்ந்த்து. 1951இல் அரபு மொழி கற்பதற்காக மொழியியல் கல்லூரியில் சேர்ந்தவர், கல்விக்காலம் முடியும் முன்பே புவியியல் ஆய்வுக்குழு ஒன்றுடன் 1953இல் சைபீரியா சென்று ஒருவருடம் அங்கு தங்கினார்.

தந்தையிடம் தார்க்கோவ்ஸ்கி மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். தாயை விட தந்தையிடம் நெருக்கமாக இருந்தார். தந்தை பிரிந்து சென்றதற்குத் தாய்தான் காரணம் என்பது அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது. தந்தை ஆர்சனேவ் தார்க்கோவ்ஸ்கி கவிஞர்; மகனுக்குத் தன்னுடைய கவிதைகளை படித்துக்காட்டுவார். தாயாரின் முயற்சியால் சிறுவயதிலிருந்து இலக்கியமும், பிற கலைகளும் அறிமுகமாகத் தொடங்கின. ஓவியனாகவோ, கவிஞனாகவோ ஆக வேண்டும் எனும் எண்ணம் மனதில் இருந்தது.

திரைப்பட இயக்கம் கற்பதற்காக 1954இல் அரசு திரைப்படக் கல்லூரி (VGIK)யில் சேர்ந்தார். அதுவரை நிலவிவந்த ஸ்டாலின் அரசின் அதீத கட்டுப்பாடுகள், அடுத்து வந்த குருசோவ் காலத்தில் சற்று தளர்த்தப்பட்டிருந்த நேரம். திரைப்படக் கல்லூரி முற்றிலும் சுதந்திரமான இடமாக இருந்தது. உலகின் அனைத்து முக்கிய இயக்குநர்களின் படைப்புகளையும் அங்கு காண முடிந்தது. தார்க்கோவ்ஸ்கியின் ஆசிரியரான மூத்த இயக்குநர் மிக்காயெல் ராம், தார்க்கோவ்ஸ்கிக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார்.

தார்க்கோவ்ஸ்கி முன்மாதிரியாக எடுத்துக்கொண்ட இயக்குநர்கள் மிசோகுச்சி (Mizoguchi), அகிரா குரோசாவா (Akira Kurosawa), பெர்க்மன் (Ingmar Bergman) ஆகியோர். அவர் மிகவும் மதித்த இயக்குநர் ராபெர்ட் ப்ரெஸ்ஸொன் (Robert Bresson). பிடித்த ஒரே ரஷ்ய இயக்குநர் தொவ்ஷென்க்கோ (Dovzhenko). உடன் படித்த ஆந்த்ரேய் கான்ச்லோவ்ஸ்கி அவர் நண்பரானார். மற்றொரு நெருங்கிய நண்பர் செர்கேய் பரஜ்னோவ் (பின்னாளில் Shadows of Forgotten Ancestors, Color of Pomegranates போன்ற அற்புதமான படைப்புகளை அளித்தவர்). படிக்கும்போதே 1957இல் தன்னுடன் படித்த இர்மாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் அர்செனேய் பிறந்தான். 29 டிசம்பர் 1986 ஆண்டு தனது 54ஆம் வயதில் இறந்தார். அவர் மறைந்தாலும் இன்று வரை தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் அவரது திரைப்படங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon