மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

ஆளில்லா சரக்கு விண்கலம்: விண்ணில் ஏவிய சீனா!

ஆளில்லா சரக்கு விண்கலம்: விண்ணில் ஏவிய சீனா!

விண்வெளியில் நிரந்தர விண்வெளி நிலையத்தை இன்னும் ஒரு சில வருடங்களில் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் சீனா முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் அதன் முன்னேற்றத்தில் ஒரு பகுதியாக டியான்ஜூ-1 என்ற விண்கலத்தை வியாழக்கிழமை (நேற்று) விண்ணில் ஏவியது. சீனாவின் தெற்கு ஹைனான் மாகாணத்தில் அமைந்துள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலத்தினை மார்ச்-7 ஒய்2 என்ற ராக்கெட் சுமந்து சென்றது.

அதன்பின் ஒரு சில மணி நேரங்களில் விண்கலம் சரியான சுற்று வட்டபாதைக்குள் நுழைந்தது. இதனையடுத்து விண்வெளி துறை அதிகாரிகள் விண்கலம் வெற்றிகரமுடன் ஏவப்பட்டது என அறிவித்தனர்.

மேலும், இந்த சரக்கு விண்கலம் விண்வெளியில் இயங்கி வரும் டியான்காங்-2 விண்வெளி நிலையத்துடன் இணைந்து செயல்படும். அதற்கு தேவையான எரிபொருள் மற்றும் பிற பொருள்களையும் வழங்கும். பூமியில் திரும்பி விழுவதற்கு முன் விண்வெளி பரிசோதனைகளையும் அது நடத்திடும் என்று தெரிவித்தனர்.

விண்வெளி நிலையத்தைப் பராமரிக்கும் பணியில் உதவிடும் என்ற வகையில் முதன்முறையாக ஏவப்பட்டுள்ள இந்த சரக்கு விண்கலமானது முக்கியத்துவம் பெறுகிறது. சரக்கு போக்குவரத்து அமைப்பு இல்லையென்றால், விண்வெளி நிலையம் இயங்க தேவையான ஆற்றல் மற்றும் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் போய்விடும். அதனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே அது பூமியில் விழுந்து விடும்.

சீனா வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் நிரந்தர விண்வெளி நிலையத்தினை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, தற்போது அனுப்பப்பட்டுள்ள விண்கலம் 10 வருடங்கள் விண்வெளியில் சுற்றி வரும் வகையில் இயங்கும்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon