மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சென்னைக்குக் குடிநீர் தர எதிர்ப்பு!

சென்னைக்குக் குடிநீர் தர எதிர்ப்பு!

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். குடி தண்ணீர் பற்றாக்குறையால் நகரங்களில் உள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கர்நாடகா அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. கேரள அரசு முல்லைப் பெரியாறில் தடுப்பணைகளைக் கட்ட முயல்கிறது. ஆந்திர அரசு பாலாற்றில் பல சிறிய தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இப்படி பக்கத்தில் இருக்கும் மூன்று மாநிலங்களும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரையும், கிடைக்க வேண்டிய தண்ணீரையும் மறுத்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை மாநகரத்தின் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தமிழக அரசு திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏரிகளிலிருந்து குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து விநியோகிக்கிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த வாலாஜா ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், வாலாஜா ஏரி தண்ணீரை நம்பியுள்ள கரைமேடு, தலைக்குளம், பின்னலூர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போகும் என்று அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனால், ஏப்ரல் 20ஆம் தேதி சென்னைக்குத் தண்ணீர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரைமேடு அருகே, கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் சாலை மறியல் குறித்து தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சென்னைக்குக் குடிநீர் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon