மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாகும் தவளைகள்!

வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாகும் தவளைகள்!

வைரஸ் காய்ச்சலைத் தடுக்க தவளைகளிடமிருந்து மருந்துகள் தயாரிக்க முடியும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் காணப்படும் வண்ணமயமான, டென்னிஸ் பந்து அளவிலான தவளை வகைகளால் வைரஸ் காய்ச்சல்களைக் குணப்படுத்த முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி, தவளையின் சளிப்படலத்தில் இருந்து சுரக்கும் திரவத்தில் வைரல் காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. அதன் சளிப்படலத்தில் உள்ள மூலக்கூறுகளால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்ல முடியும். எனவே, ஆராய்ச்சியாளர்கள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்காக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

கேரளாவில் உள்ள ஹைட்ரோஃபிளாஸ் பேஹுவிஸ்தாரா என்ற தவளை இனங்களைக் கொண்டு மனிதர்களுக்கு ஏற்படும் வைரஸ்களை அழிக்க முடியும். அதன் பாதிப்பிலிருந்து மனிதர்களையும் காப்பாற்ற முடியும்.

இந்த சர்வதேச ஆராய்ச்சிக் குழுவில் கேரளாவில் உள்ள ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் பன்றிக் காய்ச்சலுக்கு எதிராக 32 தவளைகளைப் பரிசோதனை செய்தனர். அதில் நான்கு தவளைகளின் பாதுகாப்பு பெப்டைட்கள் காய்ச்சலைப் போக்கும் திறன் கொண்டிருந்தன. மேலும் ஆராய்ச்சியாளர்கள் சிறிய மின்சார அதிர்ச்சிகளைத் தவளைகளுக்குச் செலுத்தியபோது அவை தொடர்ச்சியாக பெப்டைட் மற்றும் அமினோ அமிலங்களின் சங்கிலியைக் கொண்ட சுரப்பியை வெளியிடத் தொடங்கியுள்ளன. இது, H1 வைரஸ் காய்ச்சல் வகைக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது.

தவளைகளிடமிருந்து மருந்து சேகரிக்க இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon