மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

பேருந்து விற்பனையை இரட்டிப்பாக்கும் டெய்ம்லர்!

பேருந்து விற்பனையை இரட்டிப்பாக்கும் டெய்ம்லர்!

சொகுசுப் பேருந்துகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டெய்ம்லர் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பேருந்து விற்பனையில் இரட்டிப்பு வளர்ச்சியை பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சொகுசுக் கார்களை தயாரிப்பதில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கிறது பென்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஓர் அங்கம்தான் டெய்ம்லர். இந்தியாவில், மெர்சிடெஸ் பென்ஸ் மற்றும் பாரத் பென்ஸ் பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. சொகுசுப் பேருந்துகள் விற்பனையில் முன்னிலையில் உள்ள டெய்ம்லர், இந்தியாவில் தனது உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த பேருந்து விற்பனையை அதிகரித்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டின் இறுதியில் 16 டன் எடையுடைய பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. அதிகரித்துவரும் போட்டி காரணமாக இந்தியாவில் பேருந்து விற்பனையை அதிகரிக்க டெய்ம்லர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து டெய்ம்லர் பேருந்துகள் பிரிவின் நிர்வாக இயக்குநர் மார்கஸ் வில்லின்கர் கூறுகையில், ‘சென்ற ஆண்டு நாங்கள் இந்தியாவில் 500 பேருந்துகளை விற்பனை செய்திருந்தோம். இந்நிலையில், இந்த வருடம் இந்த எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டு வருகிறோம். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் பேருந்துகளின் தேவை அதிகரிக்கும்’என்றார்.

டெய்ம்லர் நிறுவனம் பேருந்து உற்பத்திக்காக சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.425 கோடி முதலீட்டில் ஆலை அமைத்துள்ளது. இந்த ஆலையில் மெர்சிடெஸ் பென்ஸ் மற்றும் பாரத் பென்ஸ் பேருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இந்த ஆலையில் ஆண்டுக்கு 1,500 பேருந்துகள் தயாரிக்கவும் பின்னர், படிப்படியாக உற்பத்தியை அதிகரித்து ஆண்டுக்கு 4,000 பேருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon