மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சடாரியே சரணம்!

 சடாரியே சரணம்!

திருமழிசை ஆழ்வார் பற்றியும், அவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் பற்றியும் பார்த்தோம். அடுத்து நம்மாழ்வாரை நோக்கித் திரும்புவோம்.

‘பிறக்கும்போதும் அழுகின்றான். இறக்கும்போதும் அழுகின்றான்’ என்று, மனிதனைப் பற்றி சொல்வார்கள். ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது ‘ஞ்ங்கா’ என்பது போன்ற ஒலிக்குறிப்போடு அழுதுகொண்டே பிறப்பதுதான் உலக நியதி.

9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஓர் வைகாசி மாதத்தில் தாமிரபரணி கரையில் திருக்குருகூர் கிராமத்தில் காரி- உடைய நங்கை தாம்பத்யருக்கு ஓர் மகன் பிறந்தான். புதிய ஜீவன் மலர்ந்ததால், எல்லாரும் மகிழ்ந்திருந்த நிலையில்.... பிறந்ததும் அழவேண்டிய சிசு அமைதியாக இருந்தது. தாய் பிரசவித்த மயக்கத்தில் இருக்க... குழந்தையின் குரல் கேட்கவில்லையே என மருத்துவச்சியிலிருந்து மற்றவர்கள் வரையில் தவிக்கிறார்கள். தாயின் கருவறையிலிருந்து இந்த உலகத்துக்கு வரும்போது ஒவ்வொரு ஜீவனும் எழுப்பும் குரல்தான், இந்தப் பிறவியை வாழ வந்துவிட்டேன் என்பதற்கான அறிவிப்பு.

ஆனால் இந்தக் குழந்தை குரல் எழுப்பவே இல்லை.

ஏன் என்று தெரிந்துகொள்ளும் முன், அந்த அழுகையின் அர்த்தத்தை அறிந்துகொள்வோம்.

பிரசவமாகி இந்த பூமிக்கு வரும் ஒவ்வொரு மனித சிசுவும் ரத்தமும் நிணமுமாக தாயின் கருவறைக்குள் இருந்து வெளிப்படும்போது ‘சடம்’ என்ற காற்று புதிய சிசுவின் தலையில் படுமாம். அந்தக் காற்று தீண்டும் நொடியில்தான் அந்த சிசுவும் கத்தும். சடம் என்ற அந்தக் காற்று சிசுவின் தலையில் படும்போது, ஏற்கனவே அந்த சிசு வாழ்ந்துவந்த முந்தைய பிறவிகள் பற்றிய நினைவுகள் புதிய சிசுவின் தலையிலிருந்து துடைத்து எறியப்படும். அப்படித் துடைக்கும் கணம்தான் குழந்தை அழும் என்பது தத்துவ ஞானம் சொல்லும் கோணம்.

இந்தவகையில்தான் நாம் மேலே குறிப்பிட்ட குழந்தையின் உச்சந்தலையை தீண்ட வந்திருக்கிறது சடம் என்ற அந்தக் காற்று. அந்தக் காற்று தனது தலையைத் தீண்டினால் தன் முந்தைய பிறவிகள் பற்றிய நினைவுகள் அழிந்துவிடுமே என்று உணர்ந்துகொண்ட அந்தக் குழந்தை, அக்காற்று தன்னைத் தீண்டும் முன்னமே கோபமாகப் பார்த்தது. குழந்தையின் கோபத்தைப் பார்த்து அந்தக் காற்றும் பின்வாங்கிவிட்டது.

இது கதையல்ல... காரிக்கும் உடைய நங்கைக்கும் பிறந்த குழந்தை அனைத்துவித ஞானானந்தங்களோடும் பிறந்தது என்பதை எடுத்துக்காட்டும் வலிமையான குறிப்பு.

நிற்க...

நம்மாழ்வாரை நம்மில் பலர் தரிசித்திருக்கிறோம். அவர் நம்மை நெருங்கிவருகையில் நாம் குனிந்து கொண்டுவிடுவோம். புரியவில்லையா?

பெருமாள் கோயில்களுக்கு சென்றிருப்பீர்கள். தீர்த்தம், திருத்துழாய் (துளசி) கொடுத்துவிட்டு அடுத்து சடாரி எடுத்து வருவார் அர்ச்சகர். ஒவ்வொருவராக குனிந்து பவ்யம் காட்ட, நம் தலைமேல் சடாரியை சாற்றி எடுப்பார்கள். அந்த சடாரிதான் சாட்சாத் நம்மாழ்வார்.

சடம் + ஹரி... இந்த பதங்கள் இணைந்தால் சடாரி என்று அழைக்கப்படும். சடம் என்றால் பாதம். அதாவது, ஹரியின் (திருமாலின்) திருவடி அம்சமாக அவதரித்தவர்தான் நம்மாழ்வார்.

நம்மாழ்வாருக்கு முக்கியமான பெயர் சடகோபன். இதன் பெயர்க் காரணம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல... தத்துவார்த்தமானதும்கூட.. சடம் என்ற காற்றின் மீது கோபப்பட்ட குழந்தையை நாம் மேலே பார்த்தோமல்லவா... சடம் மீது கோபப்பட்டவன் சட்டகோபன். ஆம். ஆம். அந்த குழந்தைதான் வைணவ குலபதி, பர ஞானச்சுடர் நம்மாழ்வார்.

பாரத தேசத்தின் வடபுலத்தில் புத்தர் தோன்றி புதிய ஞானச் சிந்தனைகளை பரப்பினார். அதுபோல், தென்புலத்தில் அவதரித்து தீர்க்கமான ஞானச் சிந்தனைகளை விதைத்தவர் நம்மாழ்வார். இவரது ஞானச் செல்வத்தின் நீட்சிதான் ராமானுஜ சித்தாந்தமான, ‘விசிஷ்டாத்வைதம்’ என்பார்கள்.

நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம் அருளிச்செயலின் முதல் பாசுரம் என்ன தெரியுமா?

பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்

அழுக்கு உடம்பும்

இந் நின்றநீர்மை இனி யாம் உறாமை

உயிர் அளிப்பான்

எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்

இமையோர் தலைவா

மெய்ந் நின்று கேட்டருளாய், அடியேன்

செய்யும் செய்யும் விண்ணப்பமே

இந்தப் பாசுரத்துக்கு நயவுரை நம்பி ஜெகத்ரட்சகன் அவர்கள் பண்ணிய உரையைப் பார்ப்போம்.

‘நித்திய சூரிகள் தலைவனே! உலகத்து உயிர்களைக் காக்க நீயே விருப்பமுடன் பல்வகை பிறப்புகளை எடுக்கிறாய். நாங்களோ பொய்யே நிலை பெற்ற அறிவும் தீயநடத்தையும், அழுக்குப் பதிந்த உடம்பையும் கொண்டு பிறவியில் அழுந்தியுள்ளோம். இவ்வாறு நாங்கள் பிறவி அடையாதபடி நீதான் அருள வேண்டும். அடியேன் கூறும் விண்ணப்பத்தை செவிசாய்த்து அருள வேண்டும்’ என்று அழகாக சாதிக்கிறார் ஜெகத்ரட்சகன்.

திருவிருத்தத்தின் முதல் பாசுரத்திலேயே பிறப்பறுக்கும் கோரிக்கையைத்தான் நாராயணனிடம் விண்ணப்பமாக வைக்கிறார் நம்மாழ்வார். பிறந்தபோது அவர் அழாததன் காரணம் இப்போது புரிகிறதா?

மிக இளம்வயதிலேயே பரமஞானம் பெற்ற நம்மாழ்வார் தனது ஞானச் செல்வத்தை திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்று நான்கு வகைப்பாடுகளில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அருளியிருக்கிறார்.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரத்தோடு தமிழில் வைணவத் தத்துவத்தில் புரட்சி செய்தவர் எனலாம் நம்மாழ்வாரை. அதனாலேயே இவரை, வைணவ குலபதி என்றும் இவருடைய அருளிச் செயல்களை தமிழ் வேதம் என்றும் வைணவ அடியார்கள் உயர்த்தி வைத்திருக்கிறார்கள்.

நம்மாழ்வாரின் திருக்குருகூர் அருகேயுள்ள திருக்கோளூரில் அவதரித்த மதுர கவியாழ்வார் வடக்கத்திய பயணத்தில் இருந்தபோது, கங்கைக் கரையில் நம்மாழ்வார் பற்றிய புகழுரைகள் கேட்டு... நம்மாழ்வாரின் ஞான வெளிச்சம் உணர்ந்து ஊர் திரும்பி நம்மாழ்வாரையே ஆசாரியராகக் கொண்டார்.

நாராயணனின் திருவடிகள் அம்சமான நம்மாழ்வாரை சக ஆழ்வார்களே போற்றுகையில் நாமெல்லாம் எம்மாத்திரம்!

சடாரிக்கு சிரம் கொடுத்து முடித்தபின்... குலசேகர ஆழ்வார் பக்கம் குவிப்போம் கவனத்தை...

விளம்பர பகுதி

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon