மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

டிஜிட்டல் திண்ணை:பன்னீர் - பழனிசாமி : முடியாத பேரம்!

டிஜிட்டல் திண்ணை:பன்னீர் - பழனிசாமி : முடியாத பேரம்!

அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸும் தயாராகவே இருந்தது.

“அதிமுக-வில் நேற்றைய நிலவரப்படி, முதல்வராக பன்னீர்செல்வம், துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமி என்று பேசி முடிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரவில் சூழ்நிலை மாறியது. எடப்பாடி அணியில் இருக்கும் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. ‘முதல்வர் பதவியை நாம எதுக்கு விட்டுக் கொடுக்கணும்? முதல்வராக எடப்பாடியே தொடரட்டும். அவருக்கு வேணும்னா துணை முதல்வரோ அல்லது பொதுச் செயலாளர் பதவியையோ கொடுக்கலாம். நம்மகிட்டத்தானே மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. அதுவும் இல்லாமல் அடிக்கடி முதல்வரை மாற்றிக்கிட்டே இருந்தால், அது மக்களிடமும் கெட்ட பெயரைத்தான் உண்டாக்கும். அதனால அந்த டீம் பேசினாலும், நாம அதுக்கு சம்மதிக்கக் கூடாது’ என்று வேலுமணி சொல்லியிருக்கிறார். நேற்று இரவே இந்தத் தகவல் பன்னீர் டீமுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர்களோ, ‘ஏற்கெனவே பன்னீர்தான் முதலமைச்சராக இருந்தாரு. அம்மாவால் அடையாளம் காணப்பட்ட முதல்வரும் பன்னீர்தான். அதனால் அவர்தான் முதல்வராக இருக்கணும். சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்தானே எடப்பாடி பழனிசாமி. அவரை மாற்றுவதில் என்ன பிரச்னை? அவருக்கு வேறு பொறுப்பைக் கொடுங்க. முதல்வர் பன்னீர் அண்ணன்தான். அதில் எந்த மாற்றத்துக்கும் நாங்க சம்மதிக்க மாட்டோம்’ என்று சொல்லிவிட்டார்களாம்.

அதன்பிறகுதான் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்ற டிஸ்கசனில் இறங்கியிருக்கிறது வேல்மணி அண்டு டீம். ‘தினகரன் குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அவங்க கோரிக்கை. அதை நாம செஞ்சுட்டோம். இதுக்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கு. இதுக்கு மேலயும் நாம அவங்ககிட்ட கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை. அவங்க பக்கம் எவ்வளவு பேரு இருக்காங்க? எம்.பி.க்களை பேசி சரிசெய்யும் பொறுப்பை தம்பிதுரைகிட்ட கொடுப்போம். இங்கே அவங்க பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை நானும் தங்கமணியும் பேசி சரி பண்ணிடுறோம். அதுக்குப் பிறகு நடக்கிறதை பார்த்துக்கலாம்’ என்று, வேலுமணி சொல்லியிருக்கிறார். ஆக, இரண்டு அணியும் இணைப்பில் சிக்கல் நீடித்தபடி இருக்கிறது” என்று முடிந்தது.

அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், “பன்னீர் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் வேறு எதுவும் இருக்கா?” என்று கமெண்ட்டில் கேட்டது. பதிலை ரிப்ளைஸில் போட்டது ஃபேஸ்புக்.

“சொல்றேன். தினகரனை மட்டுமல்ல; சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும். அந்த தேர்தல் நடக்கும் வரை 7 பேர் கொண்ட குழு அமைத்து கட்சியை வழிநடத்த வேண்டும். போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். பாஜக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும். அத்துடன் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும்’ என்ற கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கைகளை கேட்டதும் எடப்பாடி டீம் டென்ஷன் ஆகிவிட்டது. ‘பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் சொன்ன சில கோரிக்கைகளை ஏற்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் முதல்வராக பன்னீர் இருப்பேன் என்று சொல்வதையும், பாஜக-வுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என்று சொல்வதையும் ஏற்க முடியாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர். அதனால் சிக்கல் தொடர்கிறது” என்ற பதிலுக்கும் லைக் போட்டது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப். ‘‘தினகரனுக்கு சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாகப் பேசிவந்தாலும், அவர்களில் சிலரை அழைத்து இன்று தினகரன் பேசியிருக்கிறார். ‘நீங்க யாரும் எனக்கு ஆதரவாக இருக்கேன்னு சொல்லி கட்சிக்கு எதிராக செயல்பட வேண்டாம். இப்போ ஆட்சிக்கு ஏதாவது சிக்கல் வந்துட்டா அது எனக்கு மிகப்பெரிய கெட்டபெயரை உண்டாக்கிடும். அது வாழ்நாள் முழுக்கவே எனக்கு மனசுக்குள் உறுத்தலாகவே இருக்கும். கட்சிக்காரங்க மனசுலயும் அப்படியே பதிஞ்சுடும். அதனால நான் இப்போதைக்கு விலகி இருப்பதுதான் நல்லது. அவங்க ஆட்சியை நடத்தட்டும். ஒருவேளை, கட்சிக்கு ஏதாவது பிரச்னை வர்ற மாதிரி சூழ்நிலை உருவானால் நான் உள்ளே வர்றேன். அதுவரைக்கும் அமைதியா இருக்கேன். ஓரிரு நாளில் மறுபடியும் பெங்களூரு போறேன். சின்னம்மாவை பார்க்கிறேன். அவங்க என்ன நினைக்கிறாங்களோ தெரியல. அவங்ககிட்டயும் கேட்கிறேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம். அதுவரைக்கும் நீங்க எதுவும் ஆட்சிக்கு சிக்கல் வர்ற மாதிரி பேசிடாதீங்க. அதுதான் நீங்க எனக்கு செய்யும் பெரிய உதவியா இருக்கும்’ என்று சொல்லி உருகியிருக்கிறார். அதனால்தான் தலைமைச் செயலகத்துக்கு வந்த வெற்றிவேல், தங்க.தமிழ்செல்வன், இது சம்பந்தமாக எதுவும் பேசாமல் ‘தொகுதி பிரச்னை பற்றி பேச முதல்வரைப் பார்க்க வந்தோம்’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் போயினர்!” என்பதுதான் அந்த மெசேஜ்.

வியாழன், 20 ஏப் 2017

அடுத்ததுchevronRight icon