மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சென்னையில் உலக புத்தகக் காட்சி!

சென்னையில் உலக புத்தகக் காட்சி!

கடந்த 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. 1923ஆம் ஆண்டின் பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்த Miguel de Cervantes நினைவு தினம் என்பதால், அவரை பெருமைப்படுத்தும்விதத்தில் ஏப்ரல் 23இல் உலக புத்தக தினம் அறிவிக்க முடிவெடுத்தனர். அதுமட்டுமின்றி, William Shakespeare-ன் பிறந்த மற்றும் இறந்த நாளான ஏப்ரல் 23ஆம் நாள் உலக புத்தக தினம் கொண்டாட முடிவெடுத்து அன்றுமுதல் இன்று வரை அவை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் உலக புத்தக தினத்தையொட்டி புத்தகக் காட்சிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 'சென்னை புத்தகச் சங்கமம்' எனும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழ் மற்றும் பிற மொழி புத்தகங்களும் இந்த புத்தகக் காட்சியில் இடம்பெறும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர். மாணவர்கள், இளைஞர்களின் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும்வகையில் அனைத்து நூல்களும் 50 சதவிகித தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவிருப்பதாகவும், இந்த விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைப்புகளில் முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெறும் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை புத்தகச் சங்கமத்தின் 5ஆம் ஆண்டை சிறப்பிக்கும்வகையில் சிறப்பு புத்தகக் காட்சி ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிய 5 நாட்கள் சென்னை - பெரியார் திடலில் நடைபெற உள்ளது. 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழாவும் அதைத் தொடர்ந்து இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. அடுத்த 4 நாட்களும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் மாலை நேரத்தில், பிரபல கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து சான்றோர்களின் புத்தாக்க உரை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று புத்தாக்க உரை நிகழ்த்தியுள்ளனர். அதேபோல், குழந்தைகளுக்கான போட்டிகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெறவிருக்கிறது. அதுமட்டுமின்றி, எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெறும். அதன்படி, மின்னம்பலம் தளத்தில் கட்டுரைகள் எழுதிவரும் எழுத்தாளரும், ஆய்வாளரும், நூலகருமான திரு. ரெங்கையா முருகன் அவர்கள் இந்த வருட புத்தகர் விருது பெறுகிறார்.

தொடர்புக்கு :

சிறப்புப் புத்தகக் காட்சி

84/1 பெரியார் திடல்,

ஈ.வி.கே.சம்பத் சாலை, வெப்பேரி, சென்னை, தமிழ்நாடு-600007

தொலைபேசி : 044 - 26618161/62/63

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon