மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

தினகரன் விலகல் நாடகம் இல்லை : வைத்தியலிங்கம் எம்.பி. !

தினகரன் விலகல் நாடகம் இல்லை : வைத்தியலிங்கம் எம்.பி. !

தினகரன் விலகலில் நாடகம் எதுவுமில்லை என்று, எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கிவிட்டு அதிமுகவை - வழிநடத்துவோம், மற்றும் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து விவாதிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என கடந்த 18ஆம் தேதி இரவு நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையே, ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் அணியின் கே.பி.முனுசாமி, 'தினகரனை கட்சியிலிருந்து வெளியேற்றுவது ஒரு நாடகம் எனவும், தங்களுடைய இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம்' எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும்விதமாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், 'பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் சுமூகமாக நடத்தப்படும். பன்னீர் அணியினர்தான் நிபந்தனைகள் விதிக்கின்றனர். நாங்கள் எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை. எனவே, எங்கள் தரப்பில் எந்தக் குழப்பமும் இல்லை. அவர்களின் கோரிக்கைகள் ஒரு பொருட்டேயில்லை. ஆட்சியை ஒன்றிணைத்து நடத்த வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்.

ஜெயலலிதா மரணத்தின்போது முதல்வராக இருந்தவர் பன்னீர்செல்வம். அவர் நினைத்திருந்தால் அப்போதே விசாரணை கமிஷன் அமைத்திருக்கலாம்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை ஒருவர் தாக்கல் செய்துள்ளார். எனவே உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்க அரசு தயாராக உள்ளது. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற முடியாது. அதற்கான விசாரணை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. பன்னீர் அணியினர் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பப்பெற்றாலே இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிடும். மீண்டும் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்று நான்கு வருடங்களும் ஆட்சி நடத்த வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம். தினகரனின் விலகலில் எவ்வித நாடகமும் இல்லை. நாங்கள் எடுத்துக்கூறி வற்புறுத்தியதால்தான் அவரே விலகிச் சென்றுவிட்டார்' என்று தெரிவித்தார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon