மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

தருண் விஜய்க்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் மீது தடியடி!

தருண் விஜய்க்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் மீது தடியடி!

பாஜக எம்.பி. தருண் விஜய், அவருடைய சொந்த மாநிலமான உத்தரகாண்டைவிட தமிழகத்தில் பிரபலம். ஏனென்றால், திருக்குறளைப் போற்றி நாடு முழுவதும் பரப்பி வந்தவர். தமிழர்கள் என்றால் மலையாளிகளும், கன்னடர்களும், ஆந்திரர்களும் தண்ணியில பங்கு கேட்டு வந்துவிட்டார்கள் என்று முகத்தைத் திரும்பிக்கொண்டு செல்கையில், வட இந்தியர் ஒருவர் தமிழ் மொழியையும் திருக்குறளையும் புகழ்ந்து பேசிவிட்டால் போதாதா? அவரை தமிழகத்தில் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடினார்கள். இவற்றையெல்லாம், ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, ‘கருப்பர்களான தென்னிந்தியர்களுடன் நாங்கள் சகித்துக்கொண்டு சேர்ந்து வாழவில்லையா?’ என்று பேசி, ஒரே இரவில் போட்டு உடைத்துவிட்டார். அதிலிருந்து தருண் விஜய்க்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு.

இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 20ஆம் தேதி தருண் விஜய் வருகை தந்தார். தென்னிந்தியர்களை கருப்பர்கள் என்று இழிவாகப் பேசிய தருண் விஜய்யின் வருகையை அறிந்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகத்தின் முன்பு திரண்டு, தருண் விஜய்யை திரும்ப போகச்சொல்லி அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த புதுச்சேரி போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon