மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

தகுதியற்ற 95% இந்தியப் பொறியாளர்கள்!

தகுதியற்ற 95% இந்தியப் பொறியாளர்கள்!

இந்தியாவிலுள்ள பொறியாளர்களில் 95 சதவிகிதப்பேர் கணினி குறியீடுகள் (computer coding) சார்ந்த பணிகளுக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்பு மதிப்பீட்டு நிறுவனமான ’ஆஸ்பிரிங் மைண்ட்ஸ்’, இந்தியப் பொறியாளர்களின் பணிசார்ந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’கம்ப்யூட்டர் புரோக்ராமிங் கோடிங்’ எழுதுவதில் வெறும் 4.77 சதவிகிதத்தினர் மட்டுமே மிகச் சரியாக எழுதுவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது, 95 சதவிகித பொறியாளர்கள் கம்ப்யூட்டர் கோடிங் பணிக்குத் தகுதியற்றவர்களாக இருப்பது இந்த ஆய்வின்மூலம் தெரிய வருகிறது.

இதுபற்றி ஆஸ்பிரிங் மைண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வருண் அகர்வால் கூறுகையில், “கணினி குறியீடுகள் எழுதுவதில் போதிய திறனின்மையால் தகவல் தொழில்நுட்பத் துறையும் ‘டேட்டா சயின்ஸ்’ பிரிவும் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. கோடிங் எழுதுவதில் கைதேர்ந்தவர்கள் பொதுவாகவே நல்ல சம்பளத்திற்கு பெரிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்றத் தொடங்குவதால், பிறருக்கு அதுபற்றி கற்றுக்கொடுக்க முடியாமல் போகிறது. எனவே புரோக்ராமிங் கோடிங் பற்றி மிகச்சரியாக கற்றுத்தரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.

முதல் தர நகரங்களில் உள்ள கல்லூரிகளைவிட ஐந்து மடங்கு பின்தங்கிய நிலையிலேயே மூன்றாம் தர நகரங்களிலுள்ள கல்லூரிகள் உள்ளன. நாட்டில் முன்னணியில் உள்ள 100 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை எடுத்துக்கொண்டால் அதில், 69 சதவிகித மாணவர்களால் மட்டுமே தொகுக்கக்கூடிய கணினி குறியீடுகளை (computer coding) எழுத முடிகிறது. 31 சதவிகித மாணவர்களால் அது முடியாமல் போகிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon