மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

கோரிக்கையை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை : கே.பி.முனுசாமி

கோரிக்கையை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை : கே.பி.முனுசாமி

தங்களுடைய இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் என்று, பன்னீர்செல்வம் அணியின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் தேதி இரவு, தமிழக முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தினகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தை கட்சியிலிருந்து தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகவும். அதிமுக-வின் இரு அணிகளையும் இணைக்க குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மறுநாள், செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, 'முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமியே தொடர்வார்’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், இரு அணிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தை குறித்து ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கிய தர்மயுத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதில் தினகரன் நீக்கம் முதல் வெற்றி. இந்த முதல் வெற்றி தொடர் வெற்றியாக இருக்க வேண்டும். இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியே தர்மயுத்தம் நடத்தி வருகிறோம். 1. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற வேண்டும். 2. சசிகலா, தினகரன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, தமிழக அரசு ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும் டெல்லி தேர்தல் ஆணையத்தில் சசிகலா, பொதுச்செயலாளர் என்றும் துணை பொதுச்செயலாளர் தினகரன் என்றும் குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற வேண்டும். இந்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும்.

முதல்வர் பதவியில் பழனிசாமியே தொடர்வார் என்று மூத்த அரசியல்வாதி தம்பிதுரை கூறியுள்ளார். நாங்கள் முதல்வர் பதவியே கேட்கவில்லை. பிறகு, ஏன் அவர் இவ்வாறு கூற வேண்டும். முதல் வெற்றி என்ற பன்னீரின் பதிலுக்கு,அமைச்சர் ஜெயக்குமார் 'அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெற்றிக்கு காரணம் கூட தான்தான் என பன்னீர் கூறுவார்' என்று தெரிவித்துள்ளதன் மூலம் ஜெயக்குமார் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதிபோல பக்குவமில்லாமல் செயல்படுகிறார். மற்ற அமைச்சர்களும் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கட்சியிலிருந்து தினகரன் வெளியேற்றப்பட்டது ஒரு நாடகமே என்று நினைக்கிறேன். இதன் பின்னணியில் நடராசன், திவாகரன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறோம். அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, தினகரன் குடும்பம் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆக, சசிகலா உள்ளிட்டோர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 30 பேரையும் நீக்கினால்தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம்.

நாங்கள் முதல்வர், பொதுச்செயலாளர் பதவிகளைக் கேட்கவில்லை, நாங்கள் பதவிகள் கேட்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வம்தான் பொதுச்செயலாளராக வரவேண்டுமென விரும்புகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நடந்தால் மக்கள் பன்னீர்செல்வத்தைத்தான் முதல்வராக தேர்ந்தெடுப்பர். அனைத்து எம்.எல்.ஏ.க்களும், எங்கள் அணிக்கு வருவதற்கு தயாராக உள்ளனர். தற்போதைய நிலையில், தமிழக அரசியலில் திமுக தலைவர் கருணாநிதி தீவிரமாக இல்லாததால், அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை பன்னீர்செல்வம் கண்டிப்பாக நிரப்புவார். தமிழக அமைச்சர்கள் எவரும் மக்கள் மற்றும் தொண்டர்களின் செல்வாக்குப் பெற்றவர்களாகவே இல்லை.மேலும் சசிகலா ஆதரவில் முதல்வராகப் பொறுப்பேற்ற பழனிசாமி எப்படிச் செயல்படும் முதல்வராக முடியும். எங்கள் அணியில் சேர அமைச்சர் உதயகுமார் மாற்றிப் பேசுகிறார்’ என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார், பன்னீர்செல்வம் என இரு அணிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்வதால் இரு அணிகளும் இணைவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon