மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

டெல்லியில் விவசாயிகளின் கூடாரங்களை அகற்ற உத்தரவு!

டெல்லியில் விவசாயிகளின் கூடாரங்களை அகற்ற உத்தரவு!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லி சென்று, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த மார்ச் 14ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து 37 நாட்கள் நடைபெற்றன. இந்த 37 நாட்களில், தமிழக விவசாயிகள் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்ட வடிவங்களில் போராடினார்கள்.

தமிழக விவசாயிகளின் இந்த அறப் போராட்டத்தை ஒட்டுமொத்த தேசமே கவனித்தது. நாடு முழுவதும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு பெருகியது. தமிழகத்தில் உள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தின் எம்.பி.க்களும் டெல்லி சென்று, விவசாயிகளின் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ராதாமோகன் சிங் போன்றவர்களும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டனர். தமிழக விவசாயிகளும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ஸ்மிருதி இராணி ஆகியோரைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்படவேயில்லை. ஏனென்றால், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் மோடியிடமே உள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை ஊடகங்களில் பார்த்துவிட்டு யார் யாரோ விவசாயிகளைச் சந்திக்க வந்தார்கள். ஆனால் கடைசிவரை பிரதமர் மோடி வரவில்லை.

விவசாயிகள் இப்படி தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தால் என்னாவது, போராடும் விவசாயிகளுக்கும் குடும்பம் இருக்கிறது அல்லவா? அதனால், போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் அய்யாகண்ணு, ஏப்ரல் 19ஆம் தேதி போராடும் சக விவசாயிகளிடம் போராட்டத்தை இன்னும் தொடரலாமா? அல்லது கைவிடலாமா என்று கருத்துக் கேட்டு ஆலோசனை நடத்தினார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, போராட்டத்தை தற்காலிகமாக 2 நாட்களுக்கு தள்ளிவைப்பது என்று முடிவெடுத்து அறிவித்தனர். இதையடுத்து, தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார்கள்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாகண்ணு, இன்று (ஏப்ரல் 20) விவசாயிகள் சிறுநீரைக் குடிக்கும் அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும்விதமாக சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்தவிருந்தோம். நிதியமைச்சகத்தில் இருந்து எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துபூர்வமாக கடிதம் தருவதாகக் கூறினார்கள். அதனால் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எழுத்துபூர்வமாக உறுதியளிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம்’ என்று கூறினார்.

இந்நிலையில், தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடராத நிலையில், ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களை உடனடியாக அகற்றும்படி டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக விவசாயிகள், கூடாரத்தை அகற்ற முயற்சித்த டெல்லி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து ஜந்தர்மந்தர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி போலீஸாரின் இந்த நடவடிக்கை தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை பழிவாங்கும் நடவடிக்கை என்று டெல்லி காவல் துறைக்கு அய்யாகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon