மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

அமைச்சர்கள் குறித்து புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை : மு.க.ஸ்டாலின்

அமைச்சர்கள் குறித்து புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை : மு.க.ஸ்டாலின்

அமைச்சர்கள் மக்கள் பணி ஆற்றவில்லை என்பது குறித்து நான் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று ஏப்ரல் 20ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, தனது பிறந்தநாளை முன்னிட்டு பரிசுகளாக வழங்கப்பட்ட புத்தகங்களில் இருந்து 1110 புத்தகங்களை மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும்வகையில், தொகுதிக்குட்பட்ட 6 நூலகங்களுக்கு வழங்கினார். மேலும் ஏராளமானோருக்கு குடிநீர் குடங்களை வழங்கினார். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான் ஆய்வுப் பணியை தொடர்ந்து செய்துவருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அந்த அடிப்படையில், இன்று 64வது வார்டில் குடிநீர் பிரச்னையை அடிப்படையாக வைத்து, மகாத்மா நகர் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு தண்ணீர் குடம் வழங்கப்பட்டது. தாமரைகுளத்தைச் சுற்றி ஒரு நடைபாதையும், அதற்குரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தொகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு, சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தொகை ஒதுக்கப்பட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்துள்ளேன்.

அதைத் தொடர்ந்து, எனது பிறந்தநாளையொட்டி சால்வை மற்றும் கைத்தறி ஆடைகளுக்குப் பதிலாக எனக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய புத்தகங்களை நான் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல நூலகங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில் இன்று என்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர், ஜவஹர் நகர், கொளத்தூர், சீனிவாசபுரம், பேப்பர் மில்ஸ் சாலை, கபிலர் தெரு போன்ற இடங்களில் இருக்கக்கூடிய 6 நூல் நிலையங்களுக்கு 1110 புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற பல பணிகளை இன்று என்னுடைய தொகுதியில் நான் மேற்கொண்டிருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர்கள் மக்கள் பணி ஆற்றவில்லை என்று ஏற்கனவே ஆளுநரிடம் புகார் தெரிவித்து இருக்கிறேன், பல பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறேன், கண்டன கூட்டங்களில் தெரிவித்திருக்கிறேன். ஆகவே, நான் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே சொன்னதை, இன்று அமைச்சராக இருக்கக்கூடிய வீரமணி மட்டுமல்ல, எல்லோரும் இன்றைக்கு அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் நிரந்தர ஆளுநரை நியமனம் செய்வதில் மத்திய அரசு ஏன் தாமதப்படுத்துகிறது என்பதை ஊடகங்கள்தான் பிரதமரிடம் கேள்விகேட்டு பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon