மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

வீட்டுக்குள் விழுந்த குட்டி யானை!

வீட்டுக்குள் விழுந்த குட்டி யானை!

நீலகிரி அருகே குட்டி யானை ஒன்று வீட்டுக்கூரையை உடைத்துக்கொண்டு விழுந்ததில் வீட்டினுள் இருந்த பெண் பலத்த காயமடைந்தார்.

கோடைகாலத்தில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவது அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கோழிபாறை கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் பலா மரங்கள் அதிகளவில் உள்ளதால் பழங்களை உண்பதற்கு இன்று ஏப்ரல் 20ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஒரு தாய் யானையும், அதன் 3 மாத குட்டி யானையும் வந்துள்ளன. அந்தச் சமயத்தில் குட்டி யானை யாஹூ என்பவரின் வீட்டின்மேல் ஏறி விளையாடியுள்ளது. ஆனால் யானையின் பாரம் தாங்காமல் வீட்டின் கூரை உடைந்ததால் குட்டி யானை வீட்டுக்குள் விழுந்துள்ளது. இந்நிலையில், குட்டி யானையை மீட்பதற்காக அதனுடன் வந்த யானை வீட்டுக்கு முன் நின்று முயற்சி செய்துள்ளது. பின், வீட்டின் பின்புறச் சுவரை உடைத்து குட்டியை வெளியே மீட்டது.

இந்தச் சம்பவத்தின்போது வீட்டினுள் இருந்த ஜாஸ்மிலா என்ற பெண்ணுக்கும் அவரது கைக்குழந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் தாயையும் குழந்தையையும் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், யானைகளால் சேதம் ஏற்பட்டதற்கு நிவாரணம் வழங்கக் கோரியும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon