மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ஏற்றுமதிக்கு தயாராகும் கரிம மாம்பழங்கள்!

ஏற்றுமதிக்கு தயாராகும் கரிம மாம்பழங்கள்!

குஜராத் மற்றும் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் இன்னும் இரண்டு வாரங்களில் கரிம மாம்பழ சீசன் தொடங்கும் நிலையில், கரிம மாம்பழங்கள் ஏற்றுமதிக்கு தயாராகவிருப்பதாக, இந்தியாவின் முன்னணி மாம்பழ ஏற்றுமதி நிறுவனமான ஏ.பி.எம். இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏ.பி.எம். இண்டர்நேஷனல் நிறுவன உயரதிகாரி கே.படேல் கூறுகையில், ‘இந்த சீசனில் மாம்பழ ஏற்றுமதி எவ்வித உயர்வு தாழ்வுமின்றி சீராகவே இருக்கும். இந்த சீசனில் கரிம மாம்பழங்களின் அளவு 12 செ.மீ. அல்லது அதற்குக் குறைவாகவே இருக்கும். எனினும் வழக்கமான சுவையுடனேயே இருக்கும். எங்களது நிறுவனத்தின் முக்கிய ஏற்றுமதியாளராக அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் உள்ளன. ஐரோப்பியச் சந்தைகளில் தற்போது கரிம மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ரோம் மற்றும் நெதர்லாந்திலிருந்து அதிகமான ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கரிம மாம்பழங்கள் தவிர்த்து பிற மாம்பழங்களை நாங்கள் பெரும்பாலும் ஏற்றுமதி செய்வதில்லை. துபாயில் மட்டுமே இம்மாம்பழங்களுக்கான தேவை உள்ளது. மற்றபடி, இவற்றை வாங்கி அருகிலுள்ள இந்தியச் சந்தைகளிலேயே நாங்கள் விற்றுவிடுவோம். பொதுவாக, கரிம மாம்பழங்களை உற்பத்தி செய்வதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொள்வதாலும், அதில் அதிக செலவு இருப்பதாலும், இவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. எனவே, சர்வதேச சந்தைகளில் இவற்றுக்கான தேவை சற்றுக் குறைவாகவே உள்ளது. எனினும் எங்களிடமிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் பழங்களின் தரத்தை மட்டுமே எதிர்பார்த்து அதிகளவில் வாங்குகின்றன’ என்றார்.

பூச்சிக்கொல்லிகள், உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள், நுண்ணுயிர் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் ஆகிய எவ்வித உள்ளீடும் இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்கள் கரிம மாம்பழங்கள் எனப்படுகின்றன.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon