மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

விசாரணைக்கு வராவிட்டால் நடவடிக்கை : தினகரனுக்கு நீதிபதி கண்டனம்!

விசாரணைக்கு வராவிட்டால் நடவடிக்கை : தினகரனுக்கு நீதிபதி கண்டனம்!

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்கு வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று, டி.டி.வி.தினகரனுக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள வங்கிகளில் சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்திருப்பது அன்னியச் செலாவணி விதிமுறைகளை மீறும்வகையில் இருப்பதாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத் துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த இரு வழக்குகளின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மலர்மதி முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த இரு வழக்குகளில் ஒரு வழக்கு நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதில் ஆஜராவதற்காக டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் மீதான அன்னியச் செலாவணி மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற மே மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என்று ஒத்திவைக்கப்பட்டது. மற்றொரு அன்னியச் செலாவணி மோசடி வழக்கு இன்று ஏப்ரல் 20ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்று நீதிபதி மலர்மதி தெரிவித்தார்.

அதையடுத்து, இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் கூறுகையில், டி.டி.வி. தினகரனின் உறவினர் மகாதேவனின் மரணம் தொடர்பான சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தஞ்சைக்கு சென்றுள்ளார் என்று கூறினார். மேலும் அவர், இந்த விசாரணையில் பங்கேற்பதிலிருந்து அவருக்கு விலக்களிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நீதிபதி அதை ஏற்கவில்லை.

இதுகுறித்து நீதிபதி கூறுகையில், ‘அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் உரிய முறையில் ஆஜராக வேண்டும். இதுதான் கடைசி வாய்ப்பு. அடுத்த தடவை இந்த வழக்கு விசாரணைக்கு வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்’ என்று எச்சரித்தார். பிறகு அவர் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்பிறகு, சசிகலா மனுமீதான விசாரணை நடந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சசிகலா வக்கீல் கூறுகையில், சசிகலாவுக்கு ஏற்கனவே முதுகு வலி உள்ளது. எனவே, அவரால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நீண்ட தொலைவுக்கு வாகனத்தில் வர இயலாது என்று கூறினார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை தொடர்பாக மே 4ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon