மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சொத்துக்குவிப்பு வழக்கு: அமலாக்கத் துறையில் முதல்வர் ஆஜர்

சொத்துக்குவிப்பு வழக்கு: அமலாக்கத் துறையில் முதல்வர் ஆஜர்

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக இமாச்சலபிரதேச மாநில முதலமைச்சர் வீரபத்ர சிங் அமலாக்கத் துறை முன்பு இன்று ஏப்ரல் 20ஆம் தேதி ஆஜரானார்.

இமாச்சலபிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங் (வயது 83) கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது (2009- 2012) மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.03 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. அதையடுத்து வீரபத்ர சிங், அவரது மனைவி உள்ளிட்ட 9 பேர் மீது கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக, டெல்லியில் உள்ள வீரபத்ர சிங்குக்கு சொந்தமான ரூ.ரூ.27.29 கோடி மதிப்பிலான பண்ணை வீட்டை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கியது. இந்த வழக்குத் தொடர்பாக வீரபத்ர சிங் மனைவி பிரதீபா, மகன் விக்ரமாதித்தியா ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், வீரபத்ர சிங்கிடம் விசாரணை நடத்த முடிவுசெய்து அவருக்கும் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இன்று ஏப்ரல் 20ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, இமாச்சலபிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங், இன்று ஏப்ரல் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் பெற்றதோடு, சோதனையின்போது அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை செய்தனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon